சி.சி.டி.வி., கேமரா இருக்குமிடம் கண்டறிய போலீஸ் புது திட்டம்!

5


சென்னை: தமிழகம் முழுவதும், சி.சி.டி.வி., கேமரா அமைந்துள்ள இடம் பற்றிய விவரங்களை சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


குற்றச்சம்பவங்கள் நடந்த உடனே குற்றவாளிகளை கண்டறிவதற்கு, அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை தான் போலீசார் சோதனை செய்வார்கள். இதில் போலீசார் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை, எந்தெந்த இடங்களில் சிசிடிவி கேமரா இருக்கிறது என்பதை கண்டறிவது தான்.


அரசு அல்லது அரசு நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் போலீசார் அறிந்தவையாக இருக்கும். ஆனால் தனிநபர் யார் யார் வைத்துள்ளார்கள் என்கிற விபரம் போலீசார் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


இதற்கு தீர்வு காண வசதியாக, சிசிடிவி கேமரா விபரங்கள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றவும், அதை போலீசார் நேரடியாக இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி அரசு மற்றும் தனி நபர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.



கேமரா வகை, அதன் திறன், செயல்படுகிறதா, உரிமையாளரின் தொடர்பு எண் ஆகிய விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, ஜியோ டேக் செய்யப்படும். இதன்மூலம் குறிப்பிட்ட அந்த இணையதளத்தை பயன்படுத்தும் போலீசார், அதிகாரிகள் அனைவரும், சிசிடிவி கேமரா இருக்கும் இடங்கள் பற்றிய விவரங்களை ஒரே கிளிக்கில் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு ஏடிஎம் மையம் எங்கே உள்ளது என கூகுள் மேப்பில் தேடினால் தகவல் பெறுவது போல, குறிப்பிட்ட ஒரு ஏரியாவில் இருக்கும் சிசிடிவி கேமரா அனைத்தின் லொகேஷன்களையும் பெற முடியும் என்கின்றனர் போலீசார். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் பற்றி துப்பு துலக்குவதற்கு வசதியாக இருக்கும். அவசியமான எந்தெந்த இடங்களில் சிசிடிவி இல்லை என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நடைமுறை பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் போலீசார்.

Advertisement