த.வெ.க.வில் இணைந்த முதல் நாளில் திருமாவை சந்தித்த ஆதவ்!
சென்னை: த.வெ.க.,வில் சேர்ந்த முதல் நாளில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். தமது அரசியல் பயணம் தொடரும் என்றும் அறிவித்து இருந்தார்.
இந் நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (ஜன.31) ஆதவ் அர்ஜூனா தம்மை முறைப்படி இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
த.வெ.க.,வில் இணைந்த முதல் நாளில், அவர் திருமாவளவனை சந்தித்து பேசி உள்ளார். சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தை பெற்றுக் கொண்ட ஆதவ் அர்ஜூனா, புத்தகம் ஒன்றையும், ஈ.வெ.ரா., அம்பேத்கர் ஒன்றாக இருக்கும் சிலையையும் பரிசாக அளித்தார்.
சந்திப்பு குறித்து இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். திருமாவளவன் கூறியதாவது; எங்களின் சந்திப்பில் அரசியல் கணக்கு இல்லை. ஈ.வெ.ரா., தேவை இன்றியமையாத ஒன்றாக இருப்பதாக என்னிடம் கூறி ஆதவ் அர்ஜூனா ஆசி பெற்றார் என்று கூறினார்.
ஆதவ் அர்ஜூனா பேசுகையில், அண்ணனை சந்தித்து ஆசி பெற வந்திருக்கிறேன். த.வெ.க., விடுதலை சிறுத்தைகள் எதிர் எதிர் துருவங்கள் இல்லை. கொள்கை ரீதியானவற்றை திருமாவளவனிடம் கற்றேன். எனக்கு ஆசான் அவர்தான். எனக்கும், அவருக்கும் கொள்கை ரீதியான மாறுபாடு இல்லை என்றார்.
த.வெ.க.வில் இணைந்த நிலையில் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதவ் அர்ஜூனா வாழ்த்து பெற்ற இந்த நிகழ்வு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.