பாண்ட்யா, ஷிவம் துபே விளாசல் * தொடரை வென்றது இந்திய அணி

புனே: புனே 'டி-20' போட்டியில் இந்திய அணி, 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-1 என இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. பாண்ட்யா, துபே அரைசதம் விளாசினர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி நேற்று மஹாராஷ்டிராவில் உள்ள புனே மைதானத்தில் நடந்தது.
இத்தொடரில் முதன் முறையாக 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, துருவ், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ஷிவம் துபே சேர்க்கப்பட்டனர்.
சரிந்த 'டாப்'
இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி மீண்டும் ஏமாற்றியது. சாகிப் மக்மூத் இரண்டாவது ஓவரின் முதல் பந்தை 'ஷார்ட் பிட்ச்' ஆக வீசினார். இதில் வழக்கம் போல சாம்சன் (1) அவுட்டானார். அடுத்த பந்தில் திலக் வர்மா 'டக்' அவுட்டானார். கடைசி பந்தில், ரன் கணக்கைத் துவக்காமல் சூர்யகுமார் (0) வெளியேறினார். சாகிப் தனது முதல் ஓவரில் 3 விக்கெட் சாய்க்க, இந்திய அணிக்கு (12/3) நெருக்கடி ஏற்பட்டது. அபிஷேக் 29 ரன் எடுத்து திரும்பினார்.
துபே நம்பிக்கை
வந்த வேகத்தில் ரஷித் பந்தில் சிக்சர் அடித்தார் ஷிவம் துபே. இந்நிலையில் 26 பந்தில் 30 ரன் எடுத்த ரிங்கு சிங், ரஷித் சுழலில் சிக்கினார். துபேயுடன் இணைந்த பாண்ட்யா, கார்ஸ் வீசிய 13வது ஓவரில் இரு பவுண்டரி அடித்தார். பின் வந்த ரஷித் பந்துகளில் 4, 6 என துபே விளாச, இந்திய அணியின் ஸ்கோர் 13.2 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
பாண்ட்யா அரைசதம்
தொடர்ந்து அசத்திய பாண்ட்யா, 27வது பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 53 ரன்னுக்கு, ஓவர்டன் பந்தில் அவுட்டானார். துபே, 31வது அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் அக்சர் (5), அர்ஷ்தீப் (1), துபே (53) அவுட்டாகினர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது.
புரூக் ஆறுதல்
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், டக்கெட் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 6 ஓவரில் 62 ரன் சேர்த்த போது, டக்கெட் (39) அவுட்டானார். பில் சால்ட் (23), அக்சர் சுழலில் போல்டானார். அபாய பட்லர் (2) ரன் அவுட்டானார். ஹர்ஷித் பந்தில் லிவிங்ஸ்டன் (9) வெளியேறினார். ஹாரி புரூக், 25 வது பந்தில் அரைசதம் அடிக்க, 'டென்ஷன்' எகிறியது.
இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி சுழலில் புரூக் (51), கார்ஸ் (0) அவுட்டாகினர். பெத்தெல் (6), ஆர்ச்சர் (0) ஏமாற்ற, கடைசி 12 பந்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 25 ரன் தேவைப்பட்டன. 19 வது ஓவரை வீசிய ஹர்ஷித், 6 ரன் மட்டும் கொடுத்து ஓவர்டனை (19) போல்டாக்கினார். கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் பந்தில் சாகிப் (1) அவுட்டாக, இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.

அசத்தல் 'மாற்று' அறிமுகம்
இங்கிலாந்தின் ஓவர்டன் வீசிய பந்து (19.5) ஷிவம் துபே 'ஹெல்மெட்' மீது தாக்கியது. 'பிசியோதெரபிஸ்ட்' சோதித்த பின், கடைசி பந்தை எதிர்கொண்டு விளையாடினார். அடுத்து இங்கிலாந்து பேட்டிங் செய்ய போது, துபே வரவில்லை. இவருக்குப் பதில் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கினார்.
சர்வதேச 'டி-20'ல் அறிமுக போட்டியில் மாற்று வீரராக களமிறங்கிய முதல் இந்தியர் ஆனார். ஒட்டுமொத்தமாக 7வது வீரர் ஆனார். தொடர்ந்து பவுலிங்கில் மிரட்டிய இவர், 3 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு கைகொடுத்தார்.

12 விக்கெட்
இரு அணிகள் இடையிலான 'டி-20' தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் வருண் சக்ரவர்த்தி. இங்கிலாந்து (2025), தென் ஆப்ரிக்க (2024) தொடரில், தலா 12 விக்கெட் சாய்த்துள்ளார். அஷ்வின் (2016ல் 9, எதிர்-இலங்கை), பிஷ்னோய் (2023ல் 9, ஆஸி.,) 2வது இடத்தில் உள்ளனர்.

87 ரன்
இந்திய 'டி-20' அரங்கில் 6 அல்லது அதற்கு பிந்தைய விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் பாண்ட்யா-துபே இரண்டாவது இடம் பிடித்தனர். நேற்று இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தனர். முதலிடத்தில் சூர்யகுமார், அக்சர் ஜோடி (91 ரன், 2023, எதிர்-இலங்கை, புனே) உள்ளது.

கேப்டன் '50'

கடந்த 2022, ஜூன் மாதம் முதல் 'டி-20' அணி கேப்டனாக, பட்லர் உள்ளார். நேற்று, இங்கிலாந்து அணி கேப்டனாக தனது 50 வது 'டி-20' போட்டியில் பங்கேற்றார்.

முதல் பவுலர்
நேற்று தனது முதல் ஓவரை 'மெய்டனாக' வீசிய இங்கிலாந்தின் சாகிப் மக்மூத், சாம்சன், திலக், சூர்யகுமாரை அவுட்டாக்கினார். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான 'டி-20' போட்டியில் ஒரே ஓவரில் ரன் எதுவும் தராமல், 3 விக்கெட் சாய்த்த முதல் பவுலர், முதல் இங்கிலாந்து பவுலர் ஆனார் சாகிப் மக்மூத்.
* கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசின் ஜெரோம் டெய்லருக்குப் பின் (எதிர்-தென் ஆப்ரிக்கா) இதுபோல சாதித்த இரண்டாவது பவுலர் ஆனார் சாகிப்.

Advertisement