தாராசுரம் கோவிலுக்கு பள்ளி மாணவிகள் சுற்றுலா
விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளில் 44 பேரை, மாணவர் காவல் படைக்கு தேர்வு செய்துள்ளனர். இவர்கள் காவல்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் 12ம் நுாற்றாண்டில், இரண்டாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பாரம்பரிய கட்டடங்களின் பட்டியலில் உள்ள இக்கோவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் முக்கியமானது.
மாணவிகளுக்கு கோவிலின் சிறப்பம்சங்கள், தமிழர் கட்டடக்கலை வரலாறு, கல்வெட்டுகள், துாண்கள் மற்றும் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், தல வரலாறு, ஆய்வுக்குறிப்புகள் குறித்து ஆசிரியர், ஆசிரியைகள் எடுத்துரைத்தனர்.
மாணவிகளின் பாதுகாப்புக்கு விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் உடன் சென்றனர்.