எல்லைப்பகுதியில் கஞ்சா விற்பனை; போலீசார் தீவிர கண்காணிப்பு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் கேரள மற்றும் நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதிகளில், கஞ்சா விற்பனை ஒழிப்பு தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடையில் இருந்து தோலம்பாளையம் சாலை வழியாக கோபனாரி சென்று கேரளவுக்கு செல்லலாம். இச்சாலையில், போலீசார் நடத்திய சோதனையில், காரமடை வழியாக கேரள மாநிலம் கோட்டத்துறைக்கு கஞ்சா விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டு, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய அண்ணன், தம்பி இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை ஒடிசா மற்றும் கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து, கேரளவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும், கர்நாடகவில் இருந்து நீலகிரி மாவட்டம் வழியாக மேட்டுப்பாளையம் வந்து, கேரளாவுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது எனவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகிக்கும் வகையில் உள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
போலீசார் கூறுகையில், 'கஞ்சா விற்பனையை ஒழிக்க மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட, மாநில எல்லைகளில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்' என்றனர்.