மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 'எம்.பி., தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். தமிழகம் போராடும்; வெல்லும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் பிறந்த நாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவதில்லை. ஆனால் கட்சியினர் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, அரசின் சாதனைகள், கட்சியின் கொள்கையை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பொது கூட்டங்களை நடத்துவார்கள். இந்த முறை எனது பிறந்த நாள் வேண்டுகோளாக கட்சியினருக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.
தொகுதி மறுசீரமைப்பு
இன்றைக்கு தமிழகம் உயிர் பிரச்னையாக மொழிப்போரையும், உரிமை பிரச்னையாக தொகுதி மறு சீரமைப்பையும் எதிர்கொண்டு இருக்கிறது. எனது உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது மாநிலத்தோட சுயமரியாதை, நமது சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்.
போராட்டம்
இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை துவங்க வேண்டும். இப்பொழுது கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்திருக்கிறது. இதைப் பார்த்த மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கிட்டே அதற்கான எல்லாம் முன்னெடுப்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், நமக்கான பணத்தை இன்னும் தரவில்லை.
ஏற்க மாட்டோம்!
இதே போல் தமிழகத்துக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று தான் சொல்கிறார்களே தவிர மற்ற மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நாம் கேட்கிறது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்தின தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள்.
தமிழகம் வெல்லும்
அப்படி நடந்தால் அதை தமிழகமும், தி.மு.க.,வும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழகத்திற்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழகம் போராடும். தமிழகம் வெல்லும். நன்றி வணக்கம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.










மேலும்
-
பரத நாட்டியத்தை உயிர்ப்பித்த ருக்மணி தேவி
-
தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து
-
உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 ஊழியர்கள்; மீட்பு பணிகள் தீவிரம்
-
பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கமிஷன் தலைவர் சந்திப்பு
-
நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!
-
அலிபாக் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது; 18 பேர் பத்திரமாக மீட்பு