மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் அத்துமீறினால் 10 ஆண்டு சிறை

பெங்களூரு: கடன் வாங்கியவர்களிடம் பணத்தை வசூலிக்கும்போது, மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

சமீப காலமாக பல மாவட்டங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் தொல்லை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்தனர். இத்தகைய நிதி நிறுவனங்களின் போக்கை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, முதல்வர் தரப்பில், சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் மசோதாவை தாக்கல் செய்தார்.

இதை வாசிக்கும்போது எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சற்று நேரம் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. ஆளும், எதிர்க்கட்சி என இரு தரப்பினரும் மாறி மாறி கருத்துகள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது ஏற்கனவே உள்ள சட்டங்கள் மூலம் தண்டனை வழங்கலாம்.

ஆனால், நடவடிக்கை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால், 30 ஏழைகள் உயிர் இழந்துள்ளனர். இந்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். இதனால், சட்டத்திற்கு உட்பட்டு கடன் வழங்கக்கூடிய நிதி நிறுவனங்கள் பாதிக்கக் கூடாது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் அரவிந்த் பெல்லத்: சில நிதி நிறுவனங்கள் கஞ்சா, விபசாரம் தொழில் செய்வோருக்கு 10 சதவீத வட்டிக்கு பணம் வழங்குகின்றன.

இதற்கு போலீசாரின் மறைமுக ஆதரவு உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கும்படி சட்டம் அமைய வேண்டும்.

இறுதியாக பேசிய எச்.கே.பாட்டீல் கூறியதாவது:

மாநிலத்தில் உள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், கடன் வழங்கும் நிறுவனங்களை சட்டங்கள் மூலம் ஒழுங்குப்படுத்துவதே மசோதாவின் நோக்கமாகும்.

கட்டாயப்படுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கடன் வசூலிக்கப்படுவது நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதம் வழங்குவதை உறுதி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகர் காதர், மசோதா குறித்து குரல் ஓட்டெடுப்பு நடத்தினார். இதில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Advertisement