எதிர்க்கட்சியினர் சோடை சட்டசபை கூட்டத்தொடர் 'புஸ்'

பெங்களூரு: அரசுக்கு எதிராக போராடும் விஷயத்தில், எதிர்க்கட்சியினர் சோடை போனதால், சட்டசபை கூட்டத்தொடர் 'புஸ்' என்று ஆனது.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 3ம் தேதி துவங்கியது. இந்த கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு, நிதி நிறுவனங்கள் கொடுத்த தொல்லையால் மக்கள் தற்கொலை; பெங்களூரில் டில்லியை சேர்ந்த 36 வயது பெண் கூட்டு பலாத்காரம்; பீதரில் ஏ.டி.எம்., மையத்தில் நிரப்ப சென்ற பணம் கொள்ளை; மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளை உட்பட பல விஷயங்கள் நடந்தன.

இந்த விவகாரங்களை முன்வைத்து, சட்டசபை கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி பெரிய அளவில் போராட்டம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டத்தொடர் துவங்கி நேற்றுடன், ஆறு நாட்கள் ஆகியும், அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் எந்த போராட்டமும் நடத்தவில்லை.

வரிந்து கட்டி...



தற்போது நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தியது, கொப்பாலில் இஸ்ரேல் பெண் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளானதும் நடந்துள்ளது. இந்த இரு பிரச்னையை வைத்து, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி நிற்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதுவும் நடக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அரசுக்கு எதிராக போராடும் விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சோடை போய் உள்ளனர்.

பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர், எம்.எல்.ஏ.,க்களாக இருந்தபோது, அரசு செய்யும் தவறுகளை ஆதாரத்துடன், சட்டசபையில் சுட்டி காட்டி போராட்டம் நடத்தினர். தினமும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முறை இதுவரை, எதிர்க்கட்சியினர் சும்மா உள்ளனர்.

பேசுவது இல்லை



சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், ம.ஜ.த., சட்டசபை தலைவர் சுரேஷ் பாபு இடையே ஒருங்கிணைப்பே இல்லை. ஒரே வரிசையில் அமர்ந்து இருந்தாலும், இருவரும் பேசிக் கொள்வது இல்லை.

அசோக் ஏதாவது பேச ஆரம்பித்தால், அவருக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வரிந்து கட்டி நிற்கின்றனர். அசோக்கிற்கு ஆதரவாக பேச, அவரது கட்சி உறுப்பினர்கள் எழுந்திருப்பது இல்லை. இதனால் பல சந்தர்ப்பங்களில் அசோக் தனித்து விடப்படுகிறார்.

ஷிகாரிபுரா எம்.எல்.ஏ.,வாக இருக்கும், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, சட்டசபை கூட்டத்தொடருக்கு வருவதே இல்லை. மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர், யார் எப்படி போனால் நமக்கு என்ன என்ற மனப்பான்மையில் அமர்ந்து இருக்கின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே ஒற்றுமை இல்லாததால், பட்டாசு போன்று வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தொடர் 'புஸ்வாணம்' போன்று 'புஷ்' என்று ஆகிவிட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே ஒற்றுமை இல்லாததை பயன்படுத்திக் கொண்ட, பெரும்பாலான அமைச்சர்கள் கூட்டத்தொடருக்கு வருவதே இல்லை. இதனால் ஆளுங்கட்சி வரிசையில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக காணப்பட்டன.

Advertisement