மாயமான நர்சிங் மாணவி காதலனை மணந்தது அம்பலம்

பெலகாவி: நர்சிங் மாணவி கடத்தல் வழக்கில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. காதலனை திருமணம் செய்து, மும்பையில் வசித்தது அம்பலமாகி உள்ளது.

பெலகாவி ரூரல் சாந்தி பஸ்தவாடா கிராமத்தை சேர்ந்தவர் தீபா. இவரது மகள் ராதிகா, 22; நர்சிங் மாணவி. தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி, கடந்த மாதம் 16ம் தேதி சென்றார். பின், அவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. ராதிகாவை கண்டுபிடித்து தரும்படி, பெலகாவி ரூரல் போலீசில் தீபா புகார் செய்தார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி சாந்தி பஸ்தவாடா கிராமத்தின் சத்ருதீன், 24 என்பவரின் வீட்டிற்கு தீபாவும், அவரது உறவினர்களும் சென்றுள்ளனர். 'எங்கள் மகளை, உனது மகன் தான் கடத்தி சென்றான்' என்று கூறி, சத்ருதீன் பெற்றோரிடம் அவர்கள் தகராறு செய்தனர்.

வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். கற்களை துாக்கி வீட்டிற்குள் வீசினர். இதனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் நேற்று காலையில், பெலகாவி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு, ராதிகாவும், சத்ருதீனும் வந்தனர். இதுபற்றி அறிந்த தீபா, போலீஸ் நிலையம் சென்றார்.

'நானும், சத்ருதீனும் காதலித்தோம். இதுபற்றி எனது தாயிடம் கூறிய போது, காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டேன். என்னை யாரும் கடத்தி செல்லவில்லை' என்று, போலீசார் முன் ராதிகா கூறினார்.

அதிர்ச்சி அடைந்த தீபா, மகளை தன்னுடன் வரும்படி கெஞ்சினார். ஆனால் தாயுடன் செல்ல ராதிகா மறுத்து விட்டார். காதல் கணவருடன் தான் வாழ்வேன் என்றும் கூறினார். இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால், போலீசார் அனுப்பி வைத்தனர்.

மகளின் முடிவால் அதிர்ச்சி அடைந்த தீபா மயக்கம் போட்டு விழுந்தார். போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement