விவசாயிகளுக்கு 7 மணி நேரம் மின்சாரம் மின் துறை அமைச்சர் ஜார்ஜ் திட்டவட்டம்

பெங்களூரு: ''விதிமீறலான பம்ப் செட்டுகளை முறைப்படுத்துவது குறித்து, எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுடன் கலந்து ஆலோசித்து, ஓராண்டுக்குள் முடிவு செய்யப்படும்,'' என மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ், மேல்சபையில் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் கூளிகவுடா கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் ஜார்ஜ் கூறியதாவது:
விதிமீறலான நீர்ப்பாசன பம்ப் செட்டுகளை, முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது. இவற்றை முறைப்படுத்துவது குறித்து, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, அடுத்த ஓராண்டுக்குள் சரியான முடிவு எடுக்கப்படும்.
பற்றாக்குறை இல்லை
விவசாயிகளுக்கு தினமும் ஏழு மணி நேரம் மின்சாரம் வினியோகிப்பதில், எந்த பிரச்னையும் இல்லை. நமது மின் உற்பத்தி நிலையங்களில் தினமும் 19,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதில் 15,000 முதல் 16,000 மெகாவாட் மின்சாரம் மக்களின் தேவைக்கு வினியோகிக்கப்படுகிறது; மின் பற்றாக்குறை இல்லை.
தற்போது விவசாய பம்ப் செட்களுக்கு முதல் ஷிப்டில் நான்கு மணி நேரம்; இரண்டாவது ஷிப்டில் மூன்று மணி நேரம் மின்சாரம் வினியோகிக்கிறோம். விவசாயிகளோ, ஏழு மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் வினியோகிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் சில இடங்களில், தொடர்ந்து ஏழு மணி நேரம் செயல்படும் திறன் கொண்ட பம்ப் செட் இல்லை என, விவசாயிகளே கூறுகின்றனர். எனவே இரண்டு கட்டங்களாக மின்சாரம் வழங்குகிறோம்.
ராய்ச்சூர், மாண்டியாவில் கரும்பு அறுவடை பணிகள் நடக்கும் போது, தொடர்ந்து ஏழு மணி நேரம் மின்சாரம் வினியோகிக்கும்படி, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். தொடர்ந்து ஏழு மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக, நான் சபையில் உறுதி அளிக்க முடியாது.
ஸ்மார்ட் மீட்டர்
மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப, மின்சாரம் வழங்கப்படுகிறது. மிச்சமாகும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறோம். எந்த இடத்திலும் மின் பற்றாக்குறை ஏற்படாமல், எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.
கோடைக்காலம் என்பதால், சில மாவட்டங்களில் மின் தேவை அதிகரித்துள்ளது. பகல் நேரத்திலேயே ஏழு மணி நேரம் மின்சாரம் வேண்டும் என, விவசாயிகள் கேட்கின்றனர்.
இதற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, விவசாயிகளே பணம் கொடுக்க வேண்டும். 'கிரஹ ஜோதி' திட்டத்துக்கு, மின் வினியோக நிறுவனங்களுக்கு, முன்னதாகவே நிதி வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்