பள்ளி மாணவர்களிடையே பாதிப்பு இருக்கா... தகவல் தெரிவிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு, பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டால், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை பீளமேட்டில் செயல்படும் மெட்ரிக் பள்ளியில், 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் எவருக்கேனும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டால், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், பாதிப்படைந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையினர் கூறியதாவது: ஒவ்வொரு பருவகாலங்களிலும், சில வகையான தொற்றுகள் பரவுகின்றன. அந்த வகையில், கோடை காலத்தில் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிப்பது இயல்பு.

'மம்ப்ஸ்' என்ற வைரஸ் வாயிலாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.


இவ்வகை வைரஸ், பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் வாயிலாக, மற்றவர்களுக்கும் பரவும். ஒரு வாரத்தில் இருந்து, 14 நாட்களுக்குள் உடலுக்குள் வைரஸ் ஊடுருவி, அறிகுறிகளை வெளிப்படுத்தும்.


இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்றாலும், நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி இருந்தாலே, பாதிப்பு சரியாகும். இந்த பாதிப்பு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் கண்டறியப்படவில்லை.

இருப்பினும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்கவும் பள்ளி தலைமையாசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புக்கு தடுப்பு மருந்துகளை காட்டிலும், நோய் எதிர்பாற்றலே பாதிப்பை சரி செய்துவிடும். எனவே, பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.


அலட்சியம் வேண்டாம்!

பொன்னுக்கு வீங்கியால் பாதிக்கப்பட்ட சிறார்கள் செவியோர உமிழ்நீர்ச் சுரப்பியின் வீக்கத்தின் வலியால் அவதிப்படுவர். உணவை விழுங்குவதிலும் சிரமம் இருக்கும். இந்நோய்க்கான காரணமும் சிகிச்சைக்கான மருந்தும் அறியப்படாத காலத்தில், இதனை அம்மை நோய்களில் ஒன்றாக, முன்னோர்கள் கருதினர்.சுகாதார விதிகளைக் கடைபிடிக்கச் செய்தனர். தங்கச்சங்கிலியை நோய்வாய்ப்பட்ட சிறுவர், சிறுமியர் கழுத்தில் அணிவித்தால், நோய் குணமாகும் என, கருதினர். இதனால், அம்மைக்கட்டு நோய்க்கு, பொன்னுக்கு வீங்கி என்ற பெயர் ஏற்பட்டது. இந்நோயால் பாதிப்பு இல்லையென்றாலும், அலட்சியம் காட்டாமல் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement