22ம் தேதி உலக தண்ணீர் தினம்; கிராமசபா கூட்டம் நடத்த உத்தரவு

திருப்பூர்; தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான வரும் 22ம் தேதி கிராமசபா கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் கிராமசபா கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், உலக தண்ணீர் தினமான வரும், 22ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கிராமசபா கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினத்தன்று காலை, 11:00 மணிக்கு கிராமசபா கூட்டம் நடத்தவேண்டும். கூட்ட நிகழ்வுகளை மொபைல் செயலி மூலம் உள்ளீடு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை காலம் துவங்கிய நிலையில், மழைநீர் சேகரிப்பு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்வது, தண்ணீர் மறுசுழற்சி, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர் மாசுபாட்டை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பது, நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல், நீர் நிலைகளில் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை துார்வாரி புணரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துரைப்பது ஆகிய பத்து அம்சங்கள் குறித்து கிராமசபாவில் விவாதிக்கவேண்டும்.

கிராம ஊராட்சிகளில், 2024, ஏப்ரல் முதல் கடந்த பிப். 28ம் தேதி வரையிலான ஊராட்சி பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கையை வாசித்து, கிராமசபாவில் ஒப்புதல் பெறவேண்டும்.

ஊராட்சியில் சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்யும்வகையில், மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி, தரை மட்ட தொட்டிகளை மாதம் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும்; தினமும் போதுமான அளவு குளோரின் கலந்து குடிநீர் வினியோகிப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement