5000 டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் போட்டோ; தேதி சொல்லாமல் போராட்டம் அறிவித்த அண்ணாமலை

36

சென்னை; 5000 டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ மாட்டப்படும் போராட்டம் தேதி சொல்லாமல் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு என்று கூறி போராட்டம் நடத்த முயன்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இன்று கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். சென்னை தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கப்படவில்லை.

அப்போது அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிதுநேரம் கழித்து அவர் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது அண்ணாமலை அளித்த பேட்டி விவரம் வருமாறு;

இன்று தமிழகத்தில் பாலியல் குற்றவாளியாக இருந்தால் ராஜ மரியாதை, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் நமக்கே நஷ்ட ஈடு, மணல் கடத்தலில் ஈடுபட்டால் ராஜமரியாதை. ஆனால் ஊழலை தட்டிக் கேட்டால் சித்ரவதை. பா.ஜ.,தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரையும் கைது செய்து, மண்டபத்தில் வைத்து அது பத்தாமல் காலையில் இருந்து நடுரோட்டில் இருப்பதை பார்க்கிறோம்.

காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று இன்று முழுமையாக உள்ளே (மண்டபம்) இருந்திருக்கிறோம். ஆனால் காவல்துறை உயரதிகாரிகள் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கிறோம். மாலை 6 மணிக்கு மேல் சகோதரிகளை கைது செய்து உள்ளே வைக்கக்கூடாது என்பது சட்டம். அதை எல்லாம் மீறி இருக்கின்றனர்.

நீங்க டாஸ்மாக்குக்கு போகக் கூடாது, உங்களுக்கு அனுமதி கொடுக்கல என்று கேட்டனர். டாஸ்மாக்குக்கு அனுமதி கேட்டது, அந்த அலுவலகத்துக்கு எதிரே இருந்த மைதானத்தில். அனுமதி மறுப்பு கடிதம் தந்த பின்னர் டாஸ்மாக் போகக்கூடாது என்றனர். அதற்கும் ஒப்புக் கொண்டோம்.

மாலை 5.30 மணிக்கே டாஸ்மாக் அலுவலகம் மூடியபின்னரும், இரவு 7 மணி வரை எதற்காக பா.ஜ.,தலைவர்களையும், தொண்டர்களையும் இங்கே வைக்கணும். எங்களை பொறுத்தவரை நாங்கள் இதை தீவிரப்படுத்தப் போகிறோம். இனி நாங்கள் தேதி சொல்லாமல் தான் போராட்டம் நடத்த போகிறோம்.காவல்துறை மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்.காவல்துறைக்கு இனி எந்தவிதமான கடிதமும் கொடுக்க போவது கிடையாது.

கடைசியாக ஆர்ப்பாட்டத்திற்காக 7 கடிதம் கொடுத்தோம். ஏழு கடிதங்களையும் நிராகரித்துள்ளனர். ஜனநாயகத்தின் காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறியிருக்கின்ற காரணத்தால் அடுத்த ஒரு வாரத்தில் நடக்கக்கூடிய போராட்டம் தமிழகத்தில் உள்ள 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் ப்ரேம் போட்ட போட்டோவை மகளிர் அணி ஆணியடிச்சு அங்கே ஒட்ட போறாங்க.

அடுத்த ஒரு வாரத்துக்குள்ள தேதி குறிப்பிடாமல் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மகளிரணியினர் முன்னிருந்து நான் உள்பட முதல்வரின் ப்ரேம் போட்ட போட்டோவை சுத்தியல் வைத்து, ஆணியடித்து ஒட்ட போகிறோம்.

ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருநாள் டாஸ்மாக் கடையை மூடி போராட்டம் நடத்த போறோம். இந்த இரண்டு போராட்டமும், அடுத்த 15 நாட்களுக்குள் இரண்டு தேதிகளில் நடக்கும். 22ம் தேதி சென்னையில் ஒரு போராட்டம் நடக்க வாய்ப்பிருக்கு.அதுவும் அறிவிக்க போறதில்லை.

காவல்துறை பா.ஜ.,வுக்கு மரியாதை கொடுக்காத வரை,பா.ஜ., காவல்துறைக்கு மரியாதை கொடுக்காது. அறவழி போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று முடிவான பிறகு, நாங்கள் காவல்துறை மீது வைத்திருக்கிற நம்பிக்கையை, மரியாதையை இழந்திருக்கிறோம்.

அடுத்த 2 போராட்டமும் கட்டாயம் நடக்கும். காவல்துறை முடிந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும். தமிழகத்தில் யூனிபார்ம் போட்ட போலீஸ்காரங்களுக்கு இனி தூக்கம் இருக்கக்கூடாது. விதவிதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நடந்துட்டே இருக்கும்.

மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியாத ஒரு அதிகாரி, கமிஷனராக, டிஜி.பி,யாக உட்கார்ந்து இருக்கின்றனர். அந்த நாற்காலியில் திமுகவை காக்கா பிடித்து கோந்து போட்டு உட்கார்ந்து இருக்கின்றனர்.

இத்தனை காலமாக பொறுமையாக காவல்துறைக்கு ஆதரவாக பேசிய அரசியல்வாதி நான். ஆனால் என்னுடைய தொண்டர்களையும், சகோதரிகளையும் இழிவுப்படுத்திய பிறகு, இன்று இரவில் இருந்து காவல்துறையை நான் தூங்கவிட மாட்டேன். என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.

ஜனநாயகத்தில் நாங்கள் என்ன எங்களின் வீட்டுக்கு போராடிக் கொண்டிருக்கிறோமோ? நாட்டுக்கு போராடிக் கொண்டிருக்கிறோமா? இந்த சமுதாயம் திருந்த வேண்டும் என்பதற்காக தான் போராட்டம் நடந்திட்டு இருக்கு. அதற்கு மரியாதை கொடுக்க தெரியலை.

பா.ஜ.,தலைவனை, தொண்டனை மண்டபத்தில் அடைத்து வைக்காமல் சென்னை முழுவதும் சுத்துவேன், ரோட்டில் இறக்கிவிடுவேன், பெண்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சட்டத்தில் என்ன மரியாதை கொடுக்கணுமோ அதை கொடுக்க தெரியாது.

கிரிமினல் ரகுபதிக்கு (சட்ட அமைச்சர்) சொல்லிவிடுங்கள். முதல்வர் ஸ்டாலின் வீட்டை உறுதியாக முற்றுகையிடுவேன். வருவேன். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு ரகுபதி, மீது நடந்து கொண்டு இருக்கிறது. இவர் எங்களிடம் சட்டத்தை பற்றி சொல்கிறார். என்னை பொறுத்தவரை தமிழக சட்ட அமைச்சரே கிரிமனல்தான். சட்டத்தை அவர் பாதுகாப்பதற்கோ, சட்டத்தை போற்றி பாதுகாப்பதற்கோ அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

டாஸ்மாக் வழக்கில் முதல் குற்றவாளியாக வர வேண்டியவர் முதல்வர் ஸ்டாலின். இதை சொன்னதற்காக தைரியம் இருந்தால் சட்ட அமைச்சர் ரகுபதியை என்னை கைது பண்ண சொல்லுங்க. செந்தில் பாலாஜியை காப்பாற்றுகின்றனர். சிறையில் இருந்து வந்த பின்னர் அதே துறையை தருகின்றனர்.

த.வெ.க., வை முதலில் போராட வரச்சொல்லுங்க. ஸ்கூல் பசங்க மாதிரி உட்கார்ந்து அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. சினிமா ஷூட்டிங்கில் உட்கார்ந்து நடிகைகள் இடுப்பை கிள்ளிக்கிட்டு, டான்ஸ் ஆடிக்கிட்டு அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கிறார் நடிகர் விஜய்.

நான் என்ன விஜய் மாதிரி நடிகை இடுப்பை கிள்ளிக்கிட்டு, டான்ஸ் ஆடிக்கிட்டு உட்கார்ந்துகிட்டு, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கேனா? நான் களத்தில் இருந்து போராடிக் கொண்டு இருக்கிறேன், அரசியல் செய்து கொண்டு இருக்கிறேன். இதென்ன வொர்க் ப்ரம் ஹோம் பாலிடிக்சா நடிகர் விஜய்க்கு.

50 வயசுல தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று விஜய்க்கு தோன்றியதா? 30 வயதில் எங்கே போனார்? விஜய் யாருடைய பி டீம். நாடகம் பண்ணுவது விஜய். திமுகவின் பி டீம் தான் விஜய். நாடகம் நடத்துவது தான் த.வெ.க.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட சீக்ரெட் புராஜெக்ட் தான் தமிழக வெற்றிக்கழகம். ஏன்னா வரம்பு மீறி அவர்கள் பேசும் போது எனக்கும் பேச தெரியும். மரியாதை கொடுத்து, மரியாதை வாங்கணும். சும்மா உட்கார்ந்து கொண்டு அறிக்கை மட்டும் கொடுக்கக்கூடாது.

நீ எல்லாம் வொர்க் ப்ரம் ஹோம் பாலிடிக்ஸ் பண்ணிட்டு இருக்கே, களத்துக்கு வா. ஆக்டிங் பண்ணும் இடத்தில் இருந்து அறிக்கையை டைப் பண்ணி அனுப்பிக் கொண்டு இருக்கிறார். உனக்கு என்ன தெரியும் மக்கள் கஷ்டத்தை பத்தி.சினிமாவில் சிகரெட் அடிப்ப, ட்ரிங்க்ஸ் அடிப்ப, இதை எல்லாம் பண்ணிவிட்டு டாஸ்மாக் பத்தி பேச நடிகர் விஜய்க்கு யார் உரிமை கொடுத்தா?

சும்மா ஒரு குல்லாவை போட்டுக்கிட்டு ஒருநாள் இப்தார் விருந்து வச்சா எல்லாம் வந்துருமா? எனக்கும் பேச தெரியும். சின்ன பசங்க மாதிரி பா.ஜ.,விடம் எதுவும் பண்ணக்கூடாது.இன்றைய போராட்டம் சிறப்பாக இருந்தது. எங்களை அடைத்து வைக்க இங்கே போதிய மண்டபங்கள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement