சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!

10


சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சர்வதேச வருகை முனைய 'ஏ-5' நுழைவாயில் பகுதியில் உடைமைகளுடன் வரும் பயணியரை, விடாமல் துரத்துகின்றன. இதனால், பயணியர் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.


நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பயணியர் கூறியதாவது: சர்வதேச முனைய வளாகங்கள் மற்றும் விமான நிலைய மெட்ரோ பின்புறத்தில், நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. உடைமைகள் எடுத்து வரும் போது, நாய்கள் தொடர்ந்து துரத்துகின்றன.


'ட்ராலி' தள்ளிக்கொண்டு செல்ல முடியாமல், பதற்றத்தில் தடுமாறி விழுந்து காயம் ஏற்படுகிறது. குறிப்பாக, முதியவர்கள் அதிகம் பயப்படுகின்றனர். ஆக்ரோஷமாக திரியும் நாய்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. நாய்கள் தொல்லையை, அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


கடந்தாண்டு, ப்ளூ கிராஸ் மற்றும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, விமான நிலையத்தில் சுற்றித்திரியும் 40க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இனவிருத்தி மற்றும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின் கண்டுகொள்ளாமல் விட்டதால், சமீப நாட்களாக நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

தனி ஊழியர்கள் இல்லை



நாய்கள் தொல்லை குறித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'எக்ஸ்' தளத்தில் பதிவிடும் புகார் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து, நாய்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் அவை மீண்டும் வந்துவிடுகின்றன. நாய்களை விரட்டுவதற்கென, நிர்வாகம் யாரையும் தனியாக நியமிக்கவில்லை.

- விமான நிலைய அதிகாரிகள்

நிரந்தரமாக அகற்றலாம்



விமான நிலைய அதிகாரிகள் தகவல் தரும்போது, மாநகராட்சி சார்பில் நாய்களை பிடித்து இனவிருத்தி மற்றும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த வாரத்தில்கூட சுற்றித்திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டன. பிடித்த இடத்தில் தான் நாய்களை மீண்டும் விடமுடியும். நாங்கள் முனையங்களில் விடுவதில்லை. அவை உள்ளே சென்றுவிடுகின்றன. விமான நிலைய அதிகாரிகள், விலங்கு நல வாரியத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, நாய்களை நிரந்தரமாக அகற்ற முடியும்.

- மாநகராட்சி அதிகாரிகள்

Advertisement