வரி சேமிப்பு திட்டங்களில் முதலீட்டை தொடர்வது ஏன் அவசியம்?

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், பழைய மற்றும் புதிய வருமான வரி முறைகளில், தங்களுக்கு ஏற்றதை முடிவெடுப்பதற்கு பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். அதே நேரத்தில், புதிய வருமான வரி விதிப்பு முறை சாதகமானது என தீர்மானித்த பின், பழைய முறையில் வரிச்சலுகை அளிக்கும் 80சி பிரிவின் கீழ் வரும் முதலீடுகளை தொடர்வது குறித்து குழப்பம் ஏற்படலாம். எனினும், வரிச்சலுகையை மட்டும் மனதில் கொள்ளாமல் செயல்பட வேண்டியது அவசியம்.

நிதி பாதுகாப்பு:



புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்பவர்கள் தங்கள் முதலீடு உத்தியை சீர் துாக்கி பார்க்க வேண்டும். பி.பி.எப்., போன்ற திட்டங்கள் அளிக்கும் பலன் வரிச் சலுகைகளை கடந்தவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட கால நோக்கில் நிதி பாதுகாப்பு பெறுவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஏன் முக்கியம்:



பொது சேமநல நிதியான பி.பி.எப்., மற்றும் செல்வ மகள் திட்டம் போன்றவை ஏன் முக்கியம் என்பதை உணர வேண்டும். வரிச்சலுகை அளிப்பதோடு, இவை சேமிப்பு ஒழுக்கத்தை
ஏற்படுத்துகின்றன. ஓய்வு கால பலன்களையும் கொண்டு உள்ளன. நீண்ட கால முதலீட்டின் பலனை அளிக்கின்றன.

இடர் அம்சங்கள்:



நிதி திட்டமிடலில், வரி சேமிப்பு தவிர, ஓய்வுகால திட்டமிடல் உள்ளிட்ட நிதி இலக்குகளை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில், ஓய்வுகால பலன் அளிக்கும் பென்ஷன்
திட்டத்தையோ அல்லது கூட்டு வட்டி சார்ந்த முதலீட்டின் பலன் கொண்ட பி.பி.எப்.,
திட்டத்தையோ குறைத்து மதிப்பிடக்கூடாது.

நிதி இலக்குகள்:



பழைய முறையில் கூட, வரி சேமிப்பு முதலீடுகளை வரி சலுகைக்காக மட்டும்
மேற்கொள்ளாமல், நிதி இலக்குகளுக்கு ஏற்ப அவற்றை அமைத்துக்கொள்வது அவசியம் என்றே கருதப்படுகிறது. நீண்டகால நோக்கில் செல்வ வளத்தைஉருவாக்கி கொள்ள இந்த
அணுகுமுறையே உதவும்.

கூடுதல் பொறுப்பு:



புதிய முறையில், வரிச் சலுகைக்காக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நிதி இலக்குகளுக்கு ஏற்ற
முடிவுகளை எடுக்க வேண்டும். முதலீடுகளின் தன்மையை புரிந்து கொண்டு தீர்மானிக்க
வேண்டும்.

Advertisement