இதே நாளில் அன்று

மார்ச் 31, 1965

திருநெல்வேலியில், 1904, ஜூலை 22ல், முத்தையா தொண்டைமான் - முத்தம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் பாஸ்கர தொண்டைமான்.

இவர், திருநெல்வேலி ஹிந்து கல்லுாரியில் படித்தார். அப்போது, ரா.பி.சேதுப்பிள்ளையின் துாண்டுதலால், 'ஆனந்தபோதினி' இதழில் கம்பராமாயண கட்டுரைகளை எழுதினார். நெல்லையின் தமிழறிஞர்கள் கூடும், புகழ்பெற்ற, 'வட்டத் தொட்டி' இலக்கிய விவாத அமைப்பில், 'ரசிகமணி' டி.கே.சி.,யுடன் இணைந்து பணியாற்றினார். வனத்துறையில் பணியில் சேர்ந்து, மாவட்ட கலெக்டராக உயர்ந்தார்.

வேலுார் மாவட்ட கலெக்டராக ஓய்வுபெற்ற இவர், தமிழகம் முழுதும் உள்ள பழமையான கோவில்களுக்கு சென்று, 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தலைப்பில், 'கல்கி' இதழில் தொடர் எழுதினார். அதில் கிடைத்த வரவேற்பால், 'ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும், இந்தியக் கலைச்செல்வம், ரசிகமணி டி.கே.சி., கம்பன் சுயசரிதம்' உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட நுால்களை எழுதினார். இவரின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவர், தன், 60வது வயதில், 1965ல் இதே நாளில் மறைந்தார்.

எழுத்தாளர், தொ.மு.சி.ரகுநாதனின் சகோதரரான இவரின் நினைவு தினம் இன்று!

Advertisement