மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

கோவை: கோவை மருதமலை முருகன் கோவிலில் இன்று (ஏப்ரல் 04) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த ஜனவரி மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. கடந்த, மார்ச் 31ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று கும்பாபிஷேகம் நடப்பதால், தேவையான கோவில் திருப்பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். கோவில் உட்புறத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புதிய தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டது.
இன்று வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்செய்தனர். அடிவாரத்தில் காத்திருக்கும் பக்தர்களும், கும்பாபிஷேகத்தை நேரலையில் காணும் வகையில், பெரிய திரைகள் அமைக்கப்பட்டது.
பாதுகாப்பு பணிகளில், 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அடிவாரத்தில் இருந்து மலை மேல் பக்தர்கள் வந்து செல்லும் பாதை முழுவதும், நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
