இளம்பெண்ணிடம் சீண்டல் காமுக வாலிபருக்கு வலை

திருவொற்றியூர்,திருவொற்றியூரைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், தனியார் நிறுவன ஊழியர். கடந்த 31ம் தேதி, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி தடத்தில், மின்சார ரயிலில் பயணித்தார்.

திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கி, நடைமேடையில் நடந்து சென்றபோது, எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சுதாரித்த அப்பெண் கூச்சலிடவே, அங்கிருந்த பயணியர் அவரை பிடித்து, சரமாரியாக தாக்கிய நிலையில், வாலிபர் தப்பியோடினார்.

சம்பவம் குறித்து, பயணி ஒருவர் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பெண்ணிடம் புகாரை பெற்று, ரயில்வே நடைமேடையில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிப் பதிவுகளை கைப்பற்றி, காமுக வாலிபரை தேடி வருகின்றனர்.

Advertisement