மாநகராட்சி கவுன்சிலருக்கு சாதனை விருது

நங்கநல்லுார், நங்கநல்லுார், ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியரை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.

இதில், ஆண்டில் ஒரு மாதத்தின் தேதியை கூறினால், அது என்ன கிழமை என்பதை, அடுத்த நொடியே கூறி சாதனை படைத்த மாநகராட்சி கவுன்சிலர் துர்காதேவிக்கு, லிங்கன் புக் ஆப் ரெக்கார்டு சார்பில், உலக சாதனை விருதை, நிறுவனத்தை சேர்ந்த ஜோசப் இளந்தென்றல் வழங்கினார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வுபெற்ற சுங்கத்துறை உதவி கமிஷனர் அழகேசன் பேசியதாவது:

மாணவியர் சாதனை புரிய உழைப்பு முக்கியம். அதற்கு மனதை ஒருநிலைப்படுத்துவது அவசியம். அதில் வெற்றி பெற்றால் சாதனை படைக்கலாம்.

கவுன்சிலர் துர்கா, அரசு பள்ளியில் முதலிடமும், கல்லுாரியில் கோல்டு மெடலும் பெற்றவர். அவரின் தனித்திறன் வாயிலாக உலக சாதனை படைத்துள்ளார். அவரை மாணவியர் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement