சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் புதிய புத்தகம் கிடைக்காமல் அவதி

சென்னை:மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், புதிய புத்தகங்கள் விற்பனைக்கு வராததால், சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, சி.பி.எஸ்.இ.,க்கான, என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகங்களில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 4, 5, 7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஏப்., 1 முதல், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் திறக்கப்பட்டு, புதிய வகுப்புகள் செயல்படத் துவங்கி உள்ளன.

ஆனால், மாற்றம் செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள், இதுவரை விற்பனைக்கு வரவில்லை. அவை, ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலை துவக்கத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாக, புத்தக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

புதிய புத்தகங்கள் வரும் வரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' எனும் வழிநிலை பாடங்களை நடத்த, பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்கான புத்தகங்களும் வெளியிடப்படவில்லை. இணையதளத்தில் இருந்து அச்சடித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மிகவும் தாமதமாக வந்தன. இதனால், அனைத்து பாடங்களையும் முடிக்க முடியவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதேபோன்ற நிலை இந்த ஆண்டு ஏற்படாத வகையில், சி.பி.எஸ்.இ., விரைவாக புத்தகங்களை அச்சிட்டு வழங்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement