பார்த்தீனியம் செடிகளால் உடல் நலம் பாதிக்கும் சூழல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரை எதிரில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி எதிரில், சாலையோரம் உள்ள குளக்கரையை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், அப்பகுதியில் பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

இச்செடிகளால், மனிதர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் அரிப்பு, கொப்புளம், கண் எரிச்சல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனால், பள்ளி மாணவ- - மாணவியருக்கு பார்த்தீனியம் செடிகளால் உடல் நலம் பாதிக்கும் சூழல் உள்ளது.மேலும், மண்டியுள்ள செடி, கொடிகளில் விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் நிலை உள்ளது.

அதேபோல, கால்நடைகள் இச்செடியை உண்டால், குடல்புண், ஒவ்வாமை, பசியின்மை மற்றும் எடை குறைதல் போன்ற பல்வேறு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, திருக்காலிமேடு அரசு பள்ளி எதிரே உள்ள குளக்கரையோரம், வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement