வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை

சென்னை:தமிழகத்தில், வரும் 15ம் தேதி முதல் ஜூன் 14 வரை, 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில், வரும் 15 முதல் ஜூன் 14 வரையிலான 61 நாட்கள், மீன் இனப்பெருக்க காலமாக உள்ளது. அந்த நேரத்தில், மீன் பிடித்தால், மீன் வளம் பாதிக்கப்படும்.

எனவே, மீன் வளத்தை பாதுகாக்க, தமிழக கடல் மீன்பிடி சட்டத்தின்படி, மீன் இனப்பெருக்க காலத்தில், மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

அதன் படி, மீன் வளத்தை பாதுகாக்க, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதியிலும், மீன் இனப்பெருக்க காலமான 61 நாட்களுக்கு, விசைப் படகுகள் மற்றும் இழுவை படகுகளில் சென்று, ஆழ்கடலில் மீன்பிடிக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement