100 நாள் வேலை திட்டத்தில் 1.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்
சென்னை:'தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில், 1.5 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, ஓராண்டு பராமரிக்கப்படும்' என, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 2005 முதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு, கடந்த இரண்டு நிதியாண்டுகளாக தலா, 86,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் பணியாற்றிய, 20 கோடி மனித சக்திகளுக்கு, 3,796 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்நிதியை பெறும் முயற்சியில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களும் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்திற்கு, 7,000 கோடி ரூபாய் வரை விடுவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வனத்துறையுடன் இணைந்து, கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என, ஊரக வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அத்துறையின் செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை பெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி ஒதுக்கியதும், ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். தற்போது, 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், குளம், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இனி, மரக்கன்று நடும் பணியையும் செய்ய உள்ளோம். 6 அடிக்கு மேலான, 1.50 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, அந்தந்த ஊராட்சிகளில், ஓராண்டுக்கு பராமரிக்கப்படும்.
அரசு இடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்படும். கிராம மற்றும் பசுமை சூழலுக்கு ஏற்ப, மரக்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு நடப்படும். இதன் வாயிலாக, கிராமப்புறங்களில் பசுமை பரப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்