மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்

2

சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.


@1br2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. சில கட்சிகள் நேரடியாகவும், சில கட்சிகள் மறைமுகமாகவும் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.


இந் நிலையில் சென்னையை அடுத்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு,ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நேற்று(ஏப்.5) நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தமிழகத்தின் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்று சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. அதில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒருவர் என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பதிவாகின.


இந் நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதை கூறி உள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது; நான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசவில்லை. ஒருவேளை நான் சந்தித்து இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லப்போகிறேன். எனக்கு தயக்கமோ, பயமோ இல்லை.


ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கூட்டணி வைப்பது என்று இருந்தால் வேதாரண்யம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு ஏன் வேட்பாளர்களை அறிவிக்க போகிறேன்.


வேதாரண்யம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க போகிறேன். 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்து களப்பணியை செய்ய வைத்துள்ளேன். சின்னத்துக்காக காத்திருக்கிறேன்.


சின்னம் கிடைத்தவுடன் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவேன். தனித்து போட்டி என்று நான் ஏற்கனவே அறிவித்துவிட்டேன். எனது பயணம், எனது கால்களை நம்பித்தான் இருக்கும். அடுத்தவர் கால்களை நம்பியோ அவர்களின் தோள்களை நம்பியோ இருந்தால் எனது கனவை தேடி அவர் செல்லமாட்டார்.


ஆட்சி மாற்றம், ஆள் மாற்றம் எனது கனவு அல்ல, அடிப்படை அரசியல் மாற்றம் தான் எனது கனவு. அதை நிறைவேற்ற எனது மொழியில் இருந்து ஆரம்பிக்க வேண்டி உள்ளது. இது பெயருக்கு தான் தமிழ்நாடு. ஆனால் தமிழ்நாடு இல்லை.


எல்லாவற்றையும் இழந்து நிற்கிற நாங்கள் மறுபடியும் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து எதையும் சாதிக்க முடியும்.


இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement