மேகாலயா முதன்மை செயலர் உஸ்பெகிஸ்தானில் மரணம்

ஷில்லாங் : மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கு தனிப்பட்ட பயணமாக சென்ற மேகாலயா முதன்மை செயலர் சையத் முகமது ரசி, அங்குள்ள ஹோட்டலில் இறந்து கிடந்தார்.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில், தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2021 முதல், ஐ.ஆர்.டி.எஸ்., எனப்படும், இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை அதிகாரி சையத் முகமது ரசி, முதன்மை செயலராக பணியாற்றி வந்தார்.

உஸ்பெகிஸ்தானின் புகாரா என்ற நகருக்கு, தனிப்பட்ட பயணமாக கடந்த 4ம் தேதி அவர் சென்றார். இந்நிலையில் நேற்று, முதன்மை செயலர் சையத் முகமது ரசியை, அவரது மனைவி மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து, அவர் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அறையின் கதவை உடைத்து, ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சையத் முகமது ரசி இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

Advertisement