காங்., பிரமுகர் வழிபட்ட கோவிலை சுத்தம் செய்த பா.ஜ., நிர்வாகி சஸ்பெண்ட்

4

தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் ராம் ஜுல்லி, ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதைத் தொடர்ந்து, அதை சுத்தப்படுத்திய பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கும்பா பிஷேகம்



ராஜஸ்தானில், முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

இங்குள்ள ஆல்வார் மாவட்டம் அப்னா கர் ஷாலிமார் பகுதியில், ராமர் கோவில் ஒன்றின் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது.

ராம நவமி தினத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், காங்கிரசைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான ராம் ஜுல்லி பங்கேற்று வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து அந்தக் கோவிலை, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஞானதேவ் அஹுஜா, கங்கை நீரால் சுத்தப்படுத்தினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம் ஜுல்லி பங்கேற்றதால், கோவிலை சுத்தப்படுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

''ராமர் என்பவர், புராணத்தில் கூறப்படும் ஒரு கதாபாத்திரம் தான் என, காங்கிரஸ் தலைவர் சோனியா ஏற்கனவே கூறியிருந்தார்.

''இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று ஹிந்து கடவுள் ராமரை, ஜுல்லி இழிவுபடுத்தியுள்ளார். இதனால் தான் கோவிலை சுத்தப்படுத்தினேன்,'' என, ஞானதேவ் அஹுஜா விளக்கம் அளித்தார்.

குற்றச்சாட்டு



இருப்பினும் இந்த பிரச்னை தீவிரமானது. தலித் சமூகத்தை இழிவு படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஞானதேவ் அஹுஜாவை நீக்கி, ராஜஸ்தான் மாநில பா.ஜ., நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, மூன்று நாட்களில் பதிலளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



- நமது நிருபர் -

Advertisement