எழுச்சி பெறுமா சென்னை அணி: லக்னோ அணியுடன் மோதல்

லக்னோ: சென்னை அணி இன்று கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. வேதனை தீர்க்க, 'தல' தோனி காத்திருக்கிறார்.
லக்னோவில் உள்ள வாஜ்பாய் எகானா மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மோதுகின்றன.
தேறுமா 'டாப்-ஆர்டர்': பிரிமியர் அரங்கில் முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்ற சோகத்தில் சென்னை அணி உள்ளது. 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்க வைக்க, வரும் போட்டிகளில் வெற்றி அவசியம். 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் அதிரடியாக ரன் சேர்க்காதது பலவீனம். 'பவர்பிளே' ஓவரில் (முதல் 6 ஓவர்) 60 ரன் எடுக்கவே சிரமப்படுகிறது. முதல் பந்தில் இருந்தே விளாச ரச்சின், கான்வே தவறுகின்றனர். காயம் காரணமாக ருதுராஜ் நீக்கப்பட்ட நிலையில், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா தடுமாறுகின்றனர். 'பவர் ஷாட்' அடிக்கும் திறன் பெற்ற ஷிவம் துபே, தமிழக வீரர் விஜய் சங்கர் நிலைத்து நின்று விளையாடினால் நல்லது. அனுபவ ரவிந்திர ஜடேஜா ஏனோதானோ என பேட் செய்கிறார். அணியை கரை சேர்க்கும் ஆற்றல் படைத்த கேப்டன் தோனி, எந்த இடத்தில் களமிறங்குவார் என்பதை கணிக்க முடியவில்லை. 9வது இடத்தில் வருவதை தவிர்க்கலாம். சேப்பாக்கம் போல அல்லாமல், லக்னோ ஆடுகளம் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும். இதை சென்னை பேட்டர்கள் பயன்படுத்தினால், வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.
'வேகத்தில்' மிரட்ட கலீல் அகமது, பதிரானா உள்ளனர். 'சுழலில்' தமிழகத்தின் அஷ்வின், ஜடேஜா, நுார் அகமது அசத்தலாம்.
மிரட்டும் பூரன்: லக்னோ அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. மிட்சல் மார்ஷ் (மகளுக்கு உடல்நிலை பாதிப்பு) இடம் பெறுவது சந்தேகம். ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட 'காஸ்ட்லி' கேப்டன் ரிஷாப் பன்ட், துவக்கத்தில் வரலாம். 6 போட்டியில் 40 ரன் (சராசரி 8.00) மட்டுமே எடுத்துள்ளார். இன்று விளாச முயற்சிக்கலாம். மார்க்ரம் நல்ல 'பார்மில்' உள்ளார். நிகோலஸ் பூரன் (6 போட்டி, 349 ரன், சராசரி 69.80, ஸ்டிரைக் ரேட் 215.43), மில்லர் வாணவேடிக்கை காட்டுவது பலம்.
பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், பிஷ்னோய் கைகொடுக்கலாம். 'மிடில் ஓவரில்' திக்வேஷ் ரதி 'சுழல்' ஜாலம் நிகழ்த்தலாம்.
யார் ஆதிக்கம்
பிரிமியர் அரங்கில், இரு அணிகளும் 5 போட்டியில் மோதின. லக்னோ 3, சென்னை 1ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* லக்னோ வாஜ்பாய் எகானா மைதானத்தில் இரு போட்டியில் மோதின. லக்னோ 1ல் வென்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
மழை வருமா
வானம் தெளிவாக இருக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை.
ஆடுகளம் எப்படி
லக்னோ, வாஜ்பாய் எகானா மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.



மேலும்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி
-
மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
பயம், அச்சம்... இல்லாமல் இருப்பதற்கு என்ன வழி?
-
நாங்க மாற முடியாது என எதிர்த்த ஹார்வர்ட் பல்கலை; நிதியை நிறுத்தி டிரம்ப் 'தடாலடி'
-
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!