நுாறாவது அரைசதம் விளாசினார் கோலி: பெங்களூரு அணி வெற்றி

ஜெய்ப்பூர்: கோலி நுாறாவது அரைசதம் விளாசி சாதனை படைக்க, பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார், சரியாக 'பவுலிங்' தேர்வு செய்தார்.
ஜெய்ஸ்வால் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் நல்ல துவக்கம் தந்தார். மறுபக்கம் மந்தமாக ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் (19 பந்தில் 15 ரன்), குர்ணால் பாண்ட்யா வலையில் சிக்கினார். 35 பந்தில் அரைசதம் எட்டினார் ஜெய்ஸ்வால். ரியான் பராக், 30 ரன்னுக்கு வெளியேறினார். தனது விளாசலை தொடர்ந்த ஜெய்ஸ்வால் நம்பிக்கை தந்தார். ஹேசல்வுட் ஓவரில் (16வது) வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் ஜெய்ஸ்வால் (75, 10x4, 2x6) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. துருவ் ஜூரல் விளாச, கடைசி 4 ஓவரில் 47 ரன் எடுக்கப்பட்டன. ஹெட்மெயர் (9) நிலைக்கவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 173/4 ரன் எடுத்தது. துருவ் (35), நிதிஷ் ராணா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.


சால்ட் அரைசதம்: சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கோலி, பில் சால்ட் வலுவான அடித்தளம் அமைத்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். சந்தீப் சர்மா பந்தில் (3.1வது ஓவர்) கோலி (7 ரன்னில்) கொடுத்த 'கேட்ச்சை' ரியான் பராக் கோட்டைவிட்டார். இரு முறை (23, 43 ரன்னில்) கண்டம் தப்பிய சால்ட், 28 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த நிலையில், சால்ட் (65, 5x4, 6x6) அவுட்டானார். ஹசரங்கா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கோலி, 39 பந்தில் அரைசதம் கடந்தார். இவருக்கு பக்கபலமாக தேவ்தத் படிக்கல் விளையாடினார். சந்தீப் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய படிக்கல், சுலப வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 17.3 ஓவரில் 175/1 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. கோலி (62, 4X4, 2X6), படிக்கல் (40, 5X4, 1X6) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதல் இந்திய வீரர்
பேட்டிங்கில் அசத்திய கோலி 'டி-20' அரங்கில் 100வது அரைசதம் அடித்த முதல் இந்திய வீரரானார். முதல் ஆசிய வீரரும் ஆனார். சர்வதேச அளவில் 2வது வீரரானார். முதலிடத்தில் வார்னர் (ஆஸி., 108 அரைசதம்) உள்ளார். 405 'டி-20' போட்டிகளில் 100 அரைசதம், 9 சதம் அடித்துள்ளார். 426 சிக்சர், 1,164 பவுண்டரி உட்பட 13,134 ரன் (சராசரி 41.69, ஸ்டிரைக் ரேட் 134.36) அடித்துள்ளார்.
* பிரிமியர் அரங்கில் அதிக ரன் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 58 அரைசதம், 8 சதம் உட்பட 8,252 ரன் (258 போட்டி) எடுத்துள்ளார்.

பச்சை நிறமே...
பசுமையான சுற்றுச்சூழல், அதிக மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிற 'ஜெர்சி' அணிந்து விளையாடினர். பச்சை ராசி, வெற்றி பரிசை தந்தது.

இதய துடிப்பு எப்படி
ஜெய்ப்பூரில் நேற்று வெயில் கொளுத்திய நிலையில், பகலிரவு போட்டி நடத்தப்பட்டது. இதனால், வீரர்கள் அவதிப்பட்டனர். ஹசரங்கா பந்தை (14.4 ஓவர்) அடித்த கோலி 2 ரன்னுக்கு ஓடினார். அப்போது மூச்சுவிட சிரமப்பட்டார். அருகில் இருந்த ராஜஸ்தான் கீப்பர்-கேப்டன் சாம்சனிடம் தனது இதய துடிப்பை சோதிக்கும்படி கூறினார். சோதித்து பார்த்த சாம்சன், 'எல்லாம் சரியாக இருக்கிறது' என்றார். அந்த ஓவர் முடித்ததும் 'ஸடிராடஜிக் டைம் அவுட்' கேட்ட வீரர்கள், சற்று ஓய்வு எடுத்தனர்.

'பேட்' பிரச்னையா
நேற்று ஹெட்மெயர் (ராஜஸ்தான்), பில் சால்ட் (பெங்களூரு) களமிறங்கிய போது, அவர்களது பேட் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருக்கிறதா என கள அம்பயர்கள் பரிசோதித்தனர். சரியாக இருந்ததால், பேட் செய்ய அனுமதித்தனர்.

Advertisement