தேசிய திறனறிவு தேர்வில் நெல்லை முதலிடம்

1

திருநெல்வேலி : மத்திய அரசு நடத்தும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறிவு தேர்வில், தமிழக அளவில், திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வியை தொடர, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வை நடத்துகிறது.

இத்தேர்வில் வெற்றி பெற்றால், 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் ஆண்டுதோறும், 12,000 ரூபாய் இலவச கல்வி தொகையாக வழங்கப்படுகிறது.

இந்தியா முழுதும் 1 லட்சம் பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில், தமிழகத்தில் இருந்து, 6,659 மாணவர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இத்தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் 508 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் உத்தரவின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக சில மாதங்களாக சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் சேலம், மூன்றாம் இடத்தில் துாத்துக்குடி உள்ளன. மிகக்குறைந்த தேர்ச்சி எண்ணிக்கையில் நீலகிரி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, வேலுார் மாவட்டங்கள் உள்ளன.

Advertisement