ரயில் மோதி வாலிபர் பலி

திருபுவனை : திருபுவனை அடுத்த பள்ளிநேலியனுார் அருகே தனியார் நிறுவன ஊழியர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருபுவனை பெரிய பேட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்மேனன், 30; சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இவர், அதே பகுதியை சேர்ந்த நித்யா 23; என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நித்யா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சுரேஷ்மேனன் நேற்று முன்தினம் மாலை பைக்கில் வெளியே சென்றார். இரவு 9;00 மணியளவில் தமிழக பகுதியான, பள்ளிநேலியனுார் ரயில்வேகேட் அருகே பைக்கை நிறுத்திவிட்டு, காதில் வாக்மேன் மாட்டிய நிலையில் மொபைல் போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் சுரேஷ்மேனன் மீது மோதி 100 மீட்டர் துாரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. அதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து குறித்து ரயில் டிரைவர் கண்டமங்கலம் சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் கோட்ட ரயில்வே போலீசார், சுரேஷ்மேனன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement