மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ரூ.500, ரூ.200 கட்டணம்: ஏப்.29 முதல் மே 2 வரை ஆன்லைனில் முன்பதிவு

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் மே 8 ல் நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் ஏப்.,29 முதல் மே 2 வரை முன்பதிவு செய்து ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்., 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கி மே 10 வரை நடக்கிறது. அம்மனின் திருக்கல்யாணம் மே 8 காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் நடக்கிறது. இதை காண விரும்பும் பக்தர்கள் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெற்று வடக்கு கோபுரம் வழியாக வர வேண்டும். கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தெற்குகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.
முன்பதிவில் கட்டுப்பாடுகள்
அறநிலையத்துறையின் hrce.tn gov.in இணையதளத்திலும், கோயில் இணையதளத்திலும் maduraimeenakshi.hrce.tn.gov.in ஏப்., 29 முதல் மே 2 இரவு 9:00 மணி வரை முன்பதிவு செய்யலாம். ரூ.500 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
ரூ.200 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை பதிவு செய்ய முடியாது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டணச்சீட்டு வாங்க வேண்டும்.
பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு அலைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். தவிர மேலசித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
மே 3க்குள் தகவல் தெரிவிப்பு
ஆதார் கார்டு, போட்டோ அடையாள சான்று, அலைபேசி, இ மெயில் முகவரியுடன் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு மே 3க்குள் தகவல் தெரிவிக்கப்படும். தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் மே 4 முதல் 6 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி மையத்தில் தங்களுக்கு வந்த தகவலை காண்பித்து பணம் செலுத்தி கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
திருக்கல்யாணத்தன்று அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ரூ.500 கட்டண சீட்டு உள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு உள்ளவர்கள் வடக்கு - கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மொய் காணிக்கை
திருக்கல்யாணத்தன்று ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பு கொண்ட மொய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் கோயில் மற்றும் அறநிலையத்துறை இணையதளம் மூலம் செலுத்தலாம்.

மேலும்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?