கொடிக்கம்பம் அகற்றாமல் கட்சியினர் அடம்! நோட்டீஸ் அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு

திருப்பூர் : காலக்கெடு நேற்றுமுன்தினம் முடிவடைந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றாமல் மெத்தனமாக உள்ளனர். அகற்றிக்கொள்ள, 2 வாரம் அவகாசம் அளித்து, அந்தந்த அரசு துறைகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள நடப்பட்டுள்ள அரசியல் கட்சி, சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, 12 வாரங்களுக்குள் அகற்றவேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும், தரையில் நடப்பட்ட 2,652 கொடிக்கம்பம், பீடத்துடன் கூடிய, 645 கம்பங்கள் என, மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் அகற்றப்படவேண்டிய பட்டியலில் உள்ளன. இவற்றில், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மட்டும், 2,859 உள்ளன. மதம் சார்ந்த அமைப்புகளின், 234, ஜாதி அமைப்புகளின், 57 கம்பங்கள், இதர அமைப்புகளின் கம்பங்கள், 147 உள்ளன.
மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த மார்ச் 27ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசியல் கட்சியினரை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. கோர்ட் உத்தரவுப்படி, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்., 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என அந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மின் கம்பிகளுக்கு அருகே உள்ள கம்பங்களை அகற்ற, மின் இணைப்பு துண்டித்தும், இக்கட்டான இடங்களில் உள்ள கம்பங்களை அகற்ற தேவையான உதவிகள் செய்துதர அதிகாரிகள் தயாராக உள்ளனர். ஆனாலும், கட்சி பாகு பாடின்றி, தி.மு.க., - அ.தி.மு.க., - கம்யூனிஸ்ட் என, அனைத்து அரசியல் கட்சியினரும், கொடிக்கம்பங்களை அகற்றாமல் மெத்தனமாகவே உள்ளனர்.
கண்துடைப்பாக ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மட்டும் கம்பங்களை அகற்றியுள்ளனர். கொடிக்கம்பங்களை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு, நேற்றுமுன்தினம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், திருப்பூர் நகரம் மற்றும் பல்லடம், அவிநாசி, பொங்கலுார், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம் என, மாவட்டம் முழுவதும் அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் கம்பங்கள் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன; கட்சி, சாதி, மத அமைப்பினரின் கொடி தொடர்ந்து பறந்துகொண்டே இருக்கிறது.
இதனை தொடர்ந்து, அந்தந்த அரசு துறை வாயிலாக, அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி, கம்பங்களை சுயமாக அகற்றுவதற்கு இரண்டு வாரம் அவகாசம் அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இரண்டுவார அவகாசத்துக்குப்பின்னரும் கொடி பறந்தால், துறை சார்ந்த அதிகாரிகளே களமிறங்கி கம்பங்களை அகற்றிவிட்டு, அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வசூலிக்கப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை
-
காஷ்மீரில் பதுங்கி உள்ள 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள்: லஷ்கர் அமைப்பினர் அதிகம்
-
பஹல்காமில் பயங்கரவாதியை எதிர்த்து போராடிய குதிரை ஓட்டி வீரமரணம்
-
சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
-
காஷ்மீரில் பயத்தில் கதறிய மக்கள்: தைரியம் அளித்த இந்திய ராணுவம்
-
காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ.,; பயங்கரவாதிகளை பிடிக்க தீவிரம்