அவிநாசி - சேவூர் ரோட்டில் காத்திருக்கும் அபாயம்; ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்

அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோட்டில், ஆக்கிரமிப்பு காரணமாக, ஏற்பட்ட விபத்தில் முதியவர் பலியானார். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவிநாசி, சேவூர் ரோட்டில், வேளாண்மை அலுவலகம் முன், ரோட்டோரம், 20 காய்கறி கடைகள் உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நடுவச்சேரி ரோடு - ஓடக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ராஜன், 75 என்பவர், டூவீலரில் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, ரோட்டோரத்தில் காய்கறி கடை வைத்துள்ள பண்ணான் என்பவர், தான் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி, கதவை திறந்துள்ளார். அதில், கதவு பட்டதில் டூவீலரில் வந்த ராஜன் கீழே விழுந்து காயமடைந்து இறந்தார்.

உயிரிழந்த ராஜனின் தம்பி மகன் யோகேஷ் கூறியதாவது:

கொரோனா காலத்தில் வருவாய் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர், விவசாயிகளுக்காக காய்கறி கடை அமைக்க இருவருக்கு மட்டுமே, சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு பின், 30க்கும் மேற்பட்டோர் கடை வைத்து விட்டனர். குறிப்பாக, ஆர்.ஐ., அலுவலகத்திற்குள், காய்கறிகள், மளிகை பொருட்கள் என இருப்பு வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதனை வருவாய்த்துறையினரும் கண்டு கொள்வதில்லை. வேளாண்மை, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு வருவோர், தங்களது வாகனத்தை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, இன்னொரு உயிர் போகாமல் இருக்க, கடைகளை அப்புறப்படுத்தி, யாருக்கும் இடையூறு இல்லாத இடத்தில், அமைக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement