குடகு மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கொடவ சமுதாயத்தினர் எதிர்பார்ப்பு

குடகு : காங்கிரசுக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்களை கொடுத்த, குடகு மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடகு மாவட்டத்தில், மடிகேரி மற்றும் விராஜ்பேட் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு முன்பு குடகு மாவட்டம், பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டையாக இருந்தது. இரண்டு தொகுதிகளிலும் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.

கடந்த 2023 சட்டசபை தேர்தலில், இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் வசமானது. மடிகேரியில் டாக்டர் மந்தர் கவுடா, விராஜ்பேட்டில் வக்கீல் பொன்னண்ணா எம்.எல்.ஏ.,வாக உள்ளனர்.

பொன்னண்ணாவை, தன் சட்ட ஆலோசகராக முதல்வர் சித்தராமையா நியமித்துள்ளார். காங்கிரசுக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்களை கொடுத்த குடகு மாவட்டத்துக்கு, அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் கொடவ சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, கொடவ சமுதாய தலைவர்கள், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

விராஜ்பேட் எம்.எல்.ஏ.,வும், முதல்வரின் சட்ட ஆலோசகருமான பொன்னண்ணாவை, அமைச்சராக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டு ஆகிறது. அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, கொடவ சமுதாயத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென இந்த சமுதாய தலைவர்கள் முதல்வரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

Advertisement