ஸ்ரீநகருக்கு கூடுதல் விமானங்கள்; டிக்கெட் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், ஸ்ரீநகருக்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில், ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்திருப்பதால், அவர்களை பத்திரமாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன.
இதனிடையே, ஸ்ரீநகரில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் பயணக் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்களுடன் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்த சமயத்தில் ஸ்ரீநகருக்கும், அங்கிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் பயணக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது. ஸ்ரீநகருக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ சார்பில் 4 கூடுதல் விமானங்கள் ஸ்ரீநகரில் இருந்து இயக்கப்படுகிறது. தலைநகர் டில்லி மற்றும் மும்பைக்கு தலா இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 30ம் தேதி வரையில் டிக்கெட் நேரங்களை மாற்றியமைக்கவும், ரத்து செய்வதற்கான கட்டணங்களை முழுவதுமாக திருப்பி வழங்குவதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன