ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நாமக்கல்லில் வாகனங்களுக்கு 'கிடுக்கி'


நாமக்கல்:
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றதை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் துப்பாக்கியுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 27 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில், இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இறந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
நகரின் முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், இரவு நேரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில், இரவு நேரத்தில் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்துக்குள் நுழையும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் ஏதாவது தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வாகனங்களை போலீசார் விடுவிக்கின்றனர்.
நாமக்கல் - சேலம் சாலை கார்னர் பகுதியில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் வெங்கடேசன், குணசிங் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலை நல்லிபாளையம் பகுதியில், துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement