பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!

23

புதுடில்லி: ''பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்பப் பொறியாளர் பரத், பெருமையுடன் தன் பெயரை சொன்ன அந்த வினாடியே அவரை கொக்கரித்தபடி சுட்டுக்கொன்றனர் பயங்கரவாதிகள்'' என்று அவரது மனைவி சுஜாதா கண்ணீருடன் கூறினார்.



காஷ்மீரில் நடந்த தாக்குதலில் மனைவி சுஜாதாவின் கண் முன்னே கொல்லப் பட்டவர் தான் பெங்களூருவத சேர்ந்த ஐ.டி., ஊழியர் பரத். இவர் வயது 35. இவரது மனைவி சுஜாதா குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 வயது மகன் உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தான் திருமணம் செய்து கொண்டனர்.


தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தான், பெங்களூருவில் உள்ள தனது தந்தைக்கு வீடியோ காலில் அழைத்து காஷ்மீரின் அழகை காண்பித்துள்ளார். தாக்குதலுக்கு 10 நிமிடங்கள் முன்பு தான் தன்னுடைய மகள் சுஜாதாவிற்கு தாயார் தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார்.

உயிரிழந்த ஐ.டி., ஊழியர் பரத் அப்பா சென்னவீரப்பா கூறியதாவது: மகன் எனக்கு அழகான காட்சிகளை வீடியோ காலில் காண்பித்தார். நான் அவரைப் பாதுகாப்பாக இருக்கச் சொன்னேன். மகன் இறந்துவிட்டதாக எனது நண்பர்கள் தெரிவித்தனர். நான் அதை நம்பவில்லை. என் மூத்த மருமகளை டிவியை ஆன் செய்யச் சொன்னேன்.



ஆனால் சிக்னல் இல்லை. நான் செய்தி பார்க்க வேண்டும். டிவியை சரிசெய்யச் சொன்னேன். இன்டர்நெட் வேலை செய்யவில்லை என்று மருமகள் சொன்னாள். அவளுக்கு எல்லாம் தெரியும் ஆனால் சொல்லவில்லை. பயங்கரவாதிகள் குழந்தையை மருமகளிடம் ஒப்படைக்கச் சொல்லி இருக்கிறார்கள்.


பிறகு மகனுடைய பெயரைக் கேட்டுள்ளனர். அவன் 'பரத் பூஷன்' என்று சொன்னதும், அவன் ஹிந்துவா அல்லது முஸ்லிமா என்று கேட்டுள்ளனர். என் மகன் 'ஹிந்து' என்று பதிலளித்தபோது, ​​அவரைச் சுட்டுக் கொன்றனர். நடிகர் பரத் பூஷன் மற்றும் மன்னர் பரத் ஆகியோரின் நினைவாக தான் மகனுக்கு பரத் என பெயர் வைத்தேன்''. இவ்வாறு சென்னவீரப்பா அழுதுகொண்டே கூறினார்.

Advertisement