பெருந்துறையில் சட்ட விரோத குடியேற்றம் பங்களாதேஷ் வாலிபர்கள் 7 பேர் கைது


பெருந்துறை:பெருந்துறையில், சட்ட விரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில், போலீசார் நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் பெருந்துறை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, சென்னிமலை சாலை எல்லைமேடு பிரிவு அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நடந்து வந்த ஏழு பேர், போலீசாரை பார்த்தவுடன் ஓட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தி பிடித்து, தனித்தனியே விசாரணை நடத்தினர்.

இதில் ஏழு பேரும், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த இவர்கள், தமிழகத்தில் பெருந்துறை, ஈங்கூர், சென்னிமலை பகுதியில் தங்கி கட்டட வேலை, வெல்டிங் பணி மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு சென்று வந்தது உறுதியானது. இது தொடர்பாக, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இட்ரீஸ் அலி, 20, ஷானதா, 37, மொஹின் மியா, 34, முகமது பகிம் ஹூசேன், 24, முகமது பாரூக் ஹூசேன், 31, முகமது பிலால் ஹூசேன், 27, ஹர்சத், 33, ஆகிய ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்களில் நால்வரிடம் இருந்து, போலி ஆதார் கார்டுகளை போலீசார் கைப்பற்றினர். சிலர் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement