தண்டவாளத்தில் ஜல்லி கற்களை பிரிக்கும் இயந்திரம் நிறுத்த 'ஷெட்' அமைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில், ஜல்லி கற்களை பிரித்து சுத்தம் செய்யும் இயந்திரம் நிறுத்த 'ஷெட்' அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தண்டவாளங்களில் ரயில்கள் பயணிக்கும் போது, அதன் இரு பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்கள், அதிர்வை உள்வாங்கி கொள்கிறது.

ரயில்கள் சென்று வருவதால், அடிக்கடி ஜல்லிக் கற்கள் தேய்வு ஏற்பட்டு, துகள்களாகி விடும். அப்போது, ரயில்கள் செல்லும் அதிர்வு ஏற்படும். இதற்காக, அவ்வப்போது ரயில் தண்டவாளங்களில் உள்ள ஜல்லிக் கற்களை பிரித்து, மண் துகள் வெளியேற்றப்படும். தண்டவாளங்களை போல, ஜல்லிக் கற்களையும் பராமரிக்க வேண்டும்.

இதை பராமரிப்பதற்காகவே, 'பேலஸ்ட் கிளீனிங் மிஷின்ஸ்' எனப்படும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், குறிப்பிட்ட காலத்துக்கு பின் பழைய கற்கள் நீக்கப்பட்டு, புதிய கற்கள் பயன்படுத்தப்படும்.

அதற்கான இயந்திரம், சென்னை ராயபுரத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் சென்னை - அரக்கோணம் மார்க்கத்திற்கு கொண்டு வரப்பட்டு, பணி நிறைவடைந்ததும் மீண்டும் அங்கு கொண்டு செல்லப்படும்.

இந்த நிலையில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில், ஆறாவது நடைமேடையை ஒட்டி, தனி தண்டவாளம் அமைக்கப்பட்டு, அங்கு ஜல்லி கற்களை பிரித்து சுத்தம் செய்யும் இயந்திரம் நிறுத்த புதிதாக 'ஷெட்' அமைக்கப்பட்டு உள்ளது.

Advertisement