ஐ.டி., ஊழியரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய நான்கு பேர் கைது

கோட்டக்குப்பம்:புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டை சேர்ந்த, 22 வயது இளைஞர், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மொபைல் போனுக்கு இரு நாட்களுக்கு முன், ஒரு இளம்பெண் பேசினார்.

'ராங் கால்' எனக்கூறியும், மீண்டும் தொடர்பு கொண்ட இளம்பெண், கொஞ்சும் பாணியில் பேசி, ஐ.டி., ஊழியரை காம வலையில் விழ வைத்தார்.

ஏப்., 21ல் புதுச்சேரி, இந்திரா காந்தி சதுக்கம் அருகே இருவரும் சந்தித்தனர். அப்போது, அப்பெண் அழைத்ததால், தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த பழையபட்டின சாலையில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து, இருவரும் தங்கினர்.

அப்போது திடீரென ஒரு கும்பல் அறைக்குள் புகுந்து, ஐ.டி., ஊழியரை மிரட்டி, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவை வெளியிடுவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர்.

அப்போதுதான், அந்த கும்பல், இளம்பெண்ணை வைத்து நாடகமாடி, காம வலையில் சிக்க வைத்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த வாலிபர், கேட்கும் பணத்தை கொடுப்பதாகக் கூறி, அங்கிருந்து நழுவினார்.

கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவம் நடந்த லாட்ஜில் விசாரித்தபோது, லாட்ஜை குத்தகைக்கு நடத்தி வந்த, மூலக்குளம், ஜெர்மின் ஆல்வின், 31, இதற்கு உடந்தை என்றும், கும்பலுக்கு, பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி சுகன் தலைமை வகித்ததும் தெரியவந்தது.

மரக்காணம் கூனிமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 24, வில்லியனுார் மோகன பிரசாத், 19, ஆரோவில் சுனில், 20, ஆகியோர் திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை வைத்து, ஐ.டி., ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

கோட்டக்குப்பம் போலீசார் ஜெர்மின் ஆல்வின், திருநாவுக்கரசு, மோகனபிரசாத், சுனில் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளம்பெண் மற்றும் சுகனை தேடி வருகின்றனர்.

Advertisement