அம்பேத்கர் சிலையை மறைத்து வைத்த பேனர்களை அகற்ற போராட்டம்

பொன்னேரி,:பொன்னேரி, திருவொற்றியூர் சாலை - புதிய தேரடி சாலை சந்திப்பில், அம்பேத்கர் சிலை உள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது பல்வேறு தரப்பினர், அங்கு வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், சிலையை மறைக்கும் வகையில், விளம்பர பேனர்கள் வைப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் கூறி, நேற்று அம்பேத்கர் சிலை பராமரிப்பு குழுவினர், பொன்னேரி - திருவொற்றியூர் சாலையோரம் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் சார்பில், அம்பேத்கர் சிலையை மறைத்து விளம்பர பேனர்களை வைக்கின்றனர். இதுகுறித்து பொன்னேரி காவல்துறை, நகராட்சிக்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொன்னேரி நகராட்சி கமிஷனர் எஸ்.கே.புஷ்ரா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். இனி, 'விளம்பர பேனர்கள் வைக்க தடைவிதிக்கப்படும்' என்றார். அது தொடர்பான எச்சரிக்கை பலகையும் அங்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement