மனைவியை கொன்ற தொழிலாளி

துாத்துக்குடி:குடும்பத் தகராறில் மனைவியை கழுத்தறுத்துக் கொன்று, உடலை புதைக்க முயன்று தப்பிய தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், நம்மாழ்வார் நகரைச் சேர்ந்தவர் மரியசாமுவேல், 60; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோஸ்பின், 57. தம்பதியின் இரு மகன்களும் வெளியூரில் வசிக்கின்றனர். ஏப்., 21ம் தேதி அதிகாலை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த ஜோஸ்பின் கழுத்தை, மரியசாமுவேல் அரிவாளால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பின், உடலை புதைக்க ஊருக்கு வெளியே உள்ள பாலத்தின் கீழ்ப்பகுதிக்கு கொண்டு சென்றவர், ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், மனைவி உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பினார். ஏரல் போலீசார், தலைமறைவாக இருந்த மரியசாமுவேலை நேற்று கைது செய்தனர்.

ஜோஸ்பின் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்றது சாமுவேலுக்கு பிடிக்கவில்லை. தன் பேச்சை மீறி வேலைக்குச் சென்றதால், ஜோஸ்பினை கொன்றதாக மரியசாமுவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement