பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக சென்னைக்கு டூவீலரில் ஊர்வலம் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவு

தேனி:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு டூவீலரில் ஊர்வலமாக செல்ல உள்ளதாக சி.பி.எஸ்.,(பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தெரிவித்தார்.

தேனியில் அவர் கூறியதாவது:

2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறியது. இந்த வாக்குறுதியை அமல்படுத்தக்கூறி தமிழக அரசை வலியுறுத்தி மே 5ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கோவை வாளையாறு, கன்னியாகுமரி களியக்காவிளை ஆகிய இடங்களில் இருந்து நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் சென்னைக்கு டூவீலரில் ஊர்வலமாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் இருந்து டூவீலரில் வருவோர் சென்னையில் தலைமை செயலாளரிடம் மனு அளிக்க உள்ளோம். இந்த ஊர்வலத்தை வழிநடத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Advertisement