வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவதில் தென்மாவட்ட பங்களிப்பு 'பூஜ்யம்

1

மதுரை : வெளிநாட்டில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் உயர்கல்வி உதவித்தொகை பெறும் திட்டத்தில் தென்மாவட்டங்களில் கடந்தாண்டு ஒருவர் கூட பங்கேற்கவில்லை.


தமிழகத்தில் 2023 முதல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருந்தால் ஆண்டுக்கு ரூ.36 லட்சம், ரூ.12லட்சம் இருந்தால் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வழங்கப்படும்.

தென்மாவட்ட பங்களிப்பு இல்லை



உயர்கல்வியில் பொறியியல், வேளாண்மை, வணிகம், பொருளாதாரம், மருத்துவம், கணக்கியல் நிதி, நுண்கலைகள், விவசாய அறிவியல், கலை மற்றும் சட்டம் பயிலலாம். முதுகலை பட்டம் எனில் மூன்றாண்டுகள், ஆராய்ச்சி படிப்புக்கு 4 ஆண்டுகள் உதவித்தொகை கிடைக்கும்.


இந்தத் திட்டம் குறித்து தென்மாவட்டத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே 90 சதவீதம் பேர் பங்கேற்கின்றனர். கடந்த 2023 ல் இத்திட்டத்தில் ரூ.8 கோடி நிதி ஒதுக்கி 47 பேர் பங்கேற்றனர். 2024 ல் ரூ.60 கோடி ஒதுக்கி 171 பேர் பங்கேற்றனர். இந்தாண்டு (2025) ரூ.65 கோடி ஒதுக்கி 300 பேர் எதிர்பார்க்கின்றனர். மே இறுதி வரை வாய்ப்புள்ளது என்றாலும், 140 பேரே விண்ணப்பித்துள்ளனர்.

கல்லுாரிகளில் விழிப்புணர்வு



மதுரை மாவட்ட கல்லுாரிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


மாநில அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் மோசஸ் ராஜசேகரன் கூறியதாவது: தென்மாவட்டங்களில் 12 சதவீதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 சதவீதம் என்ற அளவில் ஆதிதிராவிடர் உள்ளனர். இதனால் விண்ணப்பம் குறைவு என்றாலும், இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுபற்றிய விவரங்களுக்கு 98428 08606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement