14 வயது வைபவ்.... 38 பந்தில் 101 ரன் * அதிவேக சதம் விளாசி சாதனை

3

ஜெய்ப்பூர்: பிரிமியர் போட்டியில்14 வயதான ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார். ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், பீல்டிங் தேர்வு செய்தார்.
சுப்மன் அரைசதம்
குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரியான் பராக் பந்தில் (6.3 ஓவர்) இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார் சுப்மன். இவர், 29வது பந்தில் அரைசதம் அடித்தார். இது, பிரிமியர் தொடரில் சுப்மனின் 24, இத்தொடரில் 4வது அரைசதமானது. முதல் விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது, சுதர்சன் (39) தீக்சனா சுழலில் அவுட்டானார்.
சந்தீப் சர்மா பந்தில் (11.4 ஓவர்) சுப்மன் ஒரு சிக்சர் அடிக்க, குஜராத் அணியின் ஸ்கோர் 100 ரன்களை (105/1) கடந்தது. தொடர்ந்து ரன் வேகத்தை அதிகரித்த சுப்மன், யுத்விர் வீசிய போட்டியின் 14வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்தார்.
மிரட்டிய பட்லர்
போட்டியின் 15வது ஓவரை வீசினார் ஹசரங்கா. இதில் பட்லர் 6, 6, 4, 6 என தொடர்ந்து விளாச, மொத்தம் 24 ரன் எடுக்கப்பட்டன. இத்தொடரின் ஒரு ஓவரில், குஜராத் அணி எடுத்த அதிகபட்ச ரன் இது. பட்லருக்கு'கம்பெனி' கொடுத்த சுப்மன், 50 பந்தில் 80 ரன் எடுத்த போது, தீக்சனா சுழலில் சிக்கினார்.
தன் பங்கிற்கு ஒரு சிக்சர் அடித்து உதவிய வாஷிங்டன் சுந்தர் (13 ரன், 8 பந்து) சந்தீப் சர்மா 'வேகத்தில்' வீழ்ந்தார். ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் டிவாட்யா (9) அவுட்டாக, பட்லர் 26 பந்தில் அரைசதம் எட்டினார். இத்தொடரில் பட்லர் அடித்த 4வது அரைசதம் இது.
முதல் 10 ஓவரில் 92 ரன் எடுத்த குஜராத் அணி, கடைசி 10 ஓவரில் 117 ரன் குவித்தது. குஜராத் அணி 20 ஓவரில் 209/4 ரன் குவித்தது. பட்லர் (50), ஷாருக்கான் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
வைபவ் மிரட்டல்
ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. சிராஜ் வீசிய போட்டியின் 3வது பந்தில்சிக்சர் அடித்து தனது விளாசலை துவக்கினார், 14 வயது வீரர் வைபவ். இஷாந்த் பந்தில் சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால், சிராஜ் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார்.
இஷாந்த் வீசிய 4வது ஓவரில் வைபவ், 2 சிக்சர், 2 பவுண்டரி விளாச, மொத்தம் 28 ரன் எடுக்கப்பட்டன. அடுத்த வந்த வாஷிங்டன் ஓவரில்6, 6, 4 என அடித்து மிரட்டிய வைபவ், 17 வதுபந்தில் அரைசதம் அடித்தார்.
கரிம் ஜனத் வீசிய ஓவரின் (10), 6 பந்தில் 6, 4, 6, 4, 4, 6 என 30 ரன் குவித்தார் வைபவ். ரஷித் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய இவர், 35 பந்தில் சதம் எட்டினார். வைபவ் 38 பந்தில்101 ரன்(ஸ்டிரைக் ரேட்265.78) எடுத்து, பிரசித் பந்தில் அவுட்டானார்.
ஜெய்ஸ்வால் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். நிதிஷ் ராணா (4) ஏமாற்றிய போதும், ராஜஸ்தான் அணி 15.5 ஓவரில் 212/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால்(70), ரியான் பராக்(32) அவுட் டாகாமல் இருந்தனர்.

இளம் வீரர்
ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் சதம் அடித்த இளம் வீரர் என வரலாறு படைத்தார் ராஜஸ்தான் அணியின் வைபவ் (14 வயது, 32 நாள், இந்தியா). விஜய் ஜோல் (18 வயது, 118 நாள், 2013, இந்தியா), வங்கதேசத்தின் பர்வேஸ் ஹொசைன் (18 வயது, 189 நாள்) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
* பிரிமியர் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் ஆனார் வைபவ். மணிஷ் பாண்டே (19 வயது, 253 நாள், 2009), ரிஷாப் பன்ட் (20 வயது, 218 நாள்) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
* பிரிமியர் அரங்கில் அதிவேக சதம் அடித்த இந்தியர் ஆனார் வைபவ் (35 பந்து). முன்னதாக யூசுப் பதான் (37) முதலிடத்தில் இருந்தார்.
* ஒட்டுமொத்த பிரிமியர் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர்களில் கிறிஸ் கெய்லுக்கு (30 பந்து, 2013), அடுத்த இடம் பிடித்தார் வைபவ் (35 பந்து).
* நேற்று 17 பந்தில் 51 ரன் எடுத்த வைபவ், பிரிமியர் அரங்கில் அதிவேக அரைசதம் அடித்த இளம் வீரர் ஆனார். ரியான் பராக் (17 வயது, 175 நாள்) அடுத்து உள்ளார்.
* பிரிமியர் அரங்கில் 18வது சீசனில் அதிவேக அரைசதம் (17) அடித்த வீரர் ஆனார்.
* ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் முதலிடத்தை சென்னையின் முரளி விஜயுடன் (11, 2010) பகிர்ந்து கொண்டார் வைபவ் (11).

'லக்கி' சுதர்சன்
பிரிமியர் தொடரில் 'லக்கி' வீரராக உள்ளார் குஜராத்தின் சாய் சுதர்சன் (தமிழகம்). இத்தொடரில் 5வது முறையாக இவர் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை எதிரணி வீரர்கள் நழுவவிட்டனர். இவை அனைத்திலும் அரைசதம் அடித்த பின் தான் அவுட்டானார்.
நேற்று 9 வது போட்டியில் பங்கேற்ற சுதர்சன், 9 ரன் எடுத்த போது, தீக்சனா பந்தில் கொடுத்த 'கேட்ச்சை', ராஜஸ்தானின் ஹெட்மயர் நழுவவிட்டார். இம்முறை 39 ரன்னில் அவுட்டாகினார்.
* தவிர, இத்தொடரில் கிடைத்த 8 'கேட்ச்' வாய்ப்பையும் தவறாவிடாமல் பிடித்த ஹெட்மயர், நேற்று முதன் முறையாக கோட்டை விட்டார்.

'ஆரஞ்ச்' தொப்பி
நேற்று 39 ரன் எடுத்த குஜராத்தின் சுதர்சன், நடப்பு பிரிமியர் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார். 9 போட்டியில் 456 ரன் எடுத்த இவருக்கு 'ஆரஞ்ச்' தொப்பி வழங்கப்பட்டது.
பெங்களூருவின் கோலி (10ல் 443), மும்பையின் சூர்யகுமார் (10ல் 427) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

541 ரன்
பிரிமியர் தொடரின் 18 வது சீசனில் 500 ரன்னுக்கும் மேல் சேர்த்த முதல் ஜோடி என குஜராத்தின் சுப்மன் கில்-சுதர்சன் பெருமை பெற்றனர். இதுவரை 9 போட்டியில் 541 ரன் எடுத்துள்ளனர்.
* பெங்களூருவின் கோலி-தேவ்தத் படிக்கல் ஜோடி (429 ரன்) இரண்டாவதாக உள்ளது. அடுத்த இரு இடத்தில் பெங்களூருவின் கோலி-பில் சால்ட் (376), பஞ்சாப்பின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் (360) ஜோடி உள்ளன.

209/4 ரன்
குஜராத் அணி நேற்று 20 ஓவரில் 209/4 ரன் எடுத்தது. பிரிமியர் தொடரில் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட 3 வது அதிகபட்ச ரன் இது. முன்னதாக 2023ல் நடந்த போட்டியில் ஐதராபாத் 217/6 (எதிர்-ராஜஸ்தான்), ராஜஸ்தான் 214/2 ரன் (எதிர்-ஐதராபாத்) எடுத்தது முதல் இரு இடத்தில் உள்ளன.

Advertisement