பெரிய கயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க கிராமத்தினர் கோரிக்கை

சித்தாமூர்,பெரியகயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

சித்தாமூர் அருகே பெரிய கயப்பாக்கம் காலனி பகுதியில், 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஏரிக்கு நடுவே உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, தினமும் குழாய்கள் வாயிலாக, கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த தண்ணீரை குடிநீராகவும், துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், பாத்திரங்கள் சுத்தம் செய்வது போன்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர் கிணற்றில் அமைக்கப்பட்டு இருந்த மேல்தளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து, கிணற்றில் விழுத்ததால், கிணறு தற்போது திறந்த நிலையில் காணப்படுகிறது.

இதனால், குடிநீர் கிணறு பாசி படிந்து காணப்படுகிறது. மேலும், குடிநீர் கிணறு குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் ஏரி நடுவே உள்ளதால், கிணற்றில் உயிரினங்கள் இறந்தால் கூட கண்டறிய முடியாத நிலை உள்ளது.

எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement