மொபட் மீது கார் மோதி இருவர் பலி; 7 பேர் காயம்

மணப்பாறை : சென்னை வேளச்சேரி, ராம்நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 37; ஐ.டி., நிறுவன ஊழியர். கோடை விடுமுறைக்காக, தன் மனைவி அபிநயா, 33, மகன் ஆத்விக், 5, மாமியார் ரேணுகா, 63, அபிநயாவின் சகோதரி தென்னரசி, 31, ஆகியோருடன், கடந்த, 1ம் தேதி காரில் மூணாறுக்கு சுற்றுலா சென்றார்.

சுற்றுலா முடிந்து, திரும்பியபோது, நேற்று மதியம், 3:00 மணியளவில், மணப்பாறை அருகே தீராம்பட்டி பிரிவு ரோட்டில் வந்த டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், மொபட்டை ஓட்டி வந்த, மஞ்சப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் ஞானபால்ராஜ், 25, பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் உட்கார்ந்து வந்த லியோ படுகாயமடைந்தார். மொபட் மீது மோதிய வேகத்தில், கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், பலத்த காயமடைந்த ரேணுகா, 63, உயிரிழந்தார். பிரபாகரன், தென்னரசி உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement