அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்ததை ஏற்க மாட்டோம்: ஷேக் ஹசீனா

2

டாக்கா : நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஆட்சியில் இருந்த அவாமி லீக் கட்சிக்கு எதிராக மாணவர்கள் கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறை வெறியாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து, அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்தாண்டு ஆக., 5ல் நாட்டை விட்டு வெளியேறினார். பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, அந்நாட்டு இடைக்கால அரசு நேற்று முன்தினம் தடை விதித்தது. அக்கட்சி மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அரசின் உத்தரவை எதிர்த்து, அக்கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எந்த சூழ்நிலையிலும், வங்கதேச அரசியலை விட்டு நான் விலகப் போவதில்லை.

இடைக்கால அரசின் உத்தரவை, வங்கதேசத்தை சுற்றியுள்ள ஜனநாயக நாடுகள் தட்டிக் கேட்க வேண்டும். நாங்களும் இந்த உத்தரவை எதிர்த்து போராட உள்ளோம். மக்களின் ஆதரவு இல்லாமல் அமைந்துள்ள இடைக்கால அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு செல்லாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement