வில்லியனுார் அருகே மனைவி மாமியாரை வெட்டியவர் கைது

வில்லியனுார் : வில்லியனுார் அருகே மனைவி மற்றும் மாமியாரை வெட்டியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் புதுநகர் 2வது தெருவை சேர்ந்த அய்யனார் மகள் ரஞ்சிதா,35; இவரது கணவர் வடிவேலன். இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். ரஞ்சிதாவுக்கும், வடிவேலனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரஞ்சிதா வேறு ஒருவருடன் சென்று விட்டார்.

இவர்களது பிள்ளைகள் கூடப்பாக்கத்தில் உள்ள ரஞ்சிதாவின் தாயார் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிள்ளைகளை பார்க்க, ரஞ்சிதா கூடப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.

இதனையறிந்த வடிவேலன், திடீரென மாமியார் வீட்டிற்குள் புகுந்து உன்னால் தான் வாழ்க்கை சீரழிந்துவிட்டது என்று ரஞ்சிதாவை, ஆபாசமாக திட்டி, சமையல் அறையில் வைத்திருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து, ரஞ்சிதாவின் முகத்தில் வெட்டினார்.

வலி தாங்க முடியாமல் சத்தம் போடவே, அவரது தாய் வந்து தடுத்துபோது, அவரையும் வடிவேலன் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். அக்கம் பக்கத்தினர் வந்து ரஞ்ஜிதா மற்றும் அவரது தாயை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரஞ்சிதா சிகிச்சை பெற்று, வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா, வழக்கு பதிவு செய்து நேற்று வடிவேலனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Advertisement