வங்கிகளில் கல்வி கடன் பெறுவதில் சிக்கல்; உயர்கல்வியிலும் அதிகரிக்கிறது இடைநிற்றல்

பொள்ளாச்சி : உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, கல்விக்கடன் வழங்கும் போது, வங்கிகளில் கல்வி கட்டணம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுவதால், பிற செலவினங்களை சமாளிக்க வழியின்றி, உயர்கல்வியில் இடைநிற்றல் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 படித்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வகையில் 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரி படிப்புகள் மற்றும் கல்லுாரி சார்ந்த விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு, 'கல்லுாரி கனவு' முகாம் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் குறித்தும், கல்விக்கடன், வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகள் குறித்த விபரங்களை வழங்குகின்றனர். குறிப்பாக, மாணவர் ஒரு கல்லுாரியில் சேர விருப்பம் தெரிவித்தால், அக்கல்லுாரி தொடர்புடைய வங்கியுடன் மாணவர் விபரம் 'லிங்க்' செய்யப்படுகிறது.
தவிர, அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை குறிப்பிட்டு ரசீது பெற்றாலும், உரிய பாதுகாப்பு ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே, வங்கிக் கடன் வழங்கப் படுகிறது. மேலும், ஹாஸ்டல், புத்தகம், தேர்வு கட்டணத்துக்கு கடன் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு, உரிய கல்வி கடன் பெற்று, கல்லுாரியில் மாணவர்கள் சேர்ந்தாலும், இதர செலவுகளால் திணறி, மாணவர்கள் ஓராண்டுக்குப் பின் படிப்பை தொடர முடிவதில்லை, என அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: 'கல்லுாரி கனவு' முகாம் வாயிலாக, தனியார் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கவே முற்படுகின்றனர். கல்விக் கடன் பெற்றுத் தருவதற்கான வங்கிகள் குறித்த விபரம் மட்டுமே அளிக்கின்றனர். இதற்காக, பள்ளி அளவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து செல்லவே அனுமதிக்கப்படுகிறது.
கிராமங்களைச் சேர்ந்த, ஏழை எளிய மாணவர்கள், கல்விக் கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், விரும்பும் கல்லுாரியில் சேர முடிவதில்லை. உரிய பாதுகாப்பு ஆவணங்கள் சமர்ப்பித்து கல்விக்கடன் பெற்றாலும், விடுதி, உணவு, உடை உள்ளிட்ட பிற செலவினங்களால், செய்வதறியாது திணறுகின்றனர். இரண்டாம் ஆண்டு, வங்கிக் கடன் தவணை பெறுவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், கல்லுாரி படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.
அதன்பின், அவரவர் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லுாரி யில் சேருகின்றனர். எனவே, கல்லுாரி கனவு நிகழ்ச்சியை நடத்துவதை காட்டிலும், அரசு கல்லுாரிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். காலத்துக்கு ஏற்ற புதிய படிப்புகளை கொண்டு வருவதுடன், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன் வாயிலாக, ஏழை எளிய மாணவர்களின் கல்லுாரி படிப்பும் நனவாகும். இவ்வாறு, கூறினர்.
வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது: வங்கிகள் கோரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், கல்விக் கட்டணம் மட்டுமின்றி தேர்வு, ஹாஸ்டல் மற்றும் புத்தகங்களுக்கான செலவினத்தையும், கடனாக பெற முடியும். மேலும், படிப்புக்கு ஏற்ப 'லேப்டாப்', கல்வி சுற்றுலா, பயிற்சி உள்ளிட்டவைகளுக்கு அக்கல்லுாரி வழிகாட்டுதலுடன் கடன் தொகை பெற முடியும்.
கடன் பெறும் மாணவர்கள், தங்களது கல்லுாரி படிப்பை முடித்தால், அதற்கான தொகையை வங்கிக்கு தவணை முறையில் செலுத்த, ஓராண்டு வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்துக்குள் அவர் பணிக்கு சென்று, பணத்தை செலுத்த தவறினால், அவர்களது பெற்றோர் வாயிலாக பணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
யு.ஜி., முடித்து, பி.ஜி., படிக்க விரும்பினால், அந்த இரு ஆண்டுகளுக்கும் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. பி.ஜி., படிப்பு முடித்தவுடன் அதற்கான தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.









மேலும்
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!